உலகளவில்
பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச்
சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச்
சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்தவாரம்....
காதல் கோவில் 'கஜுரஹோ'
கலைநயத்துடன்
எழுந்து நிற்கும் கோவில்களுக்கும் காம விளையாட்டுக்களைச் சித்தரிக்கும்
சிற்பங்களுக்கும் பெயர்பெற்றது 'கஜுரஹோ'. இங்குள்ள ஆயிரக்கணக்கான
சிற்பங்களில் வெறும் பத்து சதவீதமே காமத்தைச் சித்தரிப்பவை. ஆனால்,
அத்தனையும் 'பளிச் பளிச்' ரகங்கள்.
'காதலையும் காமத்தையும் தெரிந்து கொள்' என்கிற ரீதியில் உருவாக்கப்பட்ட கஜுரஹோ சிற்பங்கள், கி.பி.9- கி.பி.13ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட
காலத்தைச் சேர்ந்தவை. மத்தியப் பிரதேச மாநிலம் சாட்டர்பூர் மாவட்டத்தில்
அமைந்துள்ள கஜுரஹோவின் பழைய பெயர் கர்ஜுரவஹாகா என்பதாகும். கர்ஜுர் என்றால்
சமஸ்கிருதத்தில் ஈச்சம்பழம் என அர்த்தமாம். அப்போது, ஈச்ச மரங்கள் நிறைந்த
இடமாக இருந்ததால், கர்ஜுரவஹாகா என்றழைக்கப்பட்டு பின்னர் கஜுரஹோ என
மருவியதாக வரலாறு.
ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து 13ம் நூற்றாண்டு
வரை மத்திய இந்தியாவை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், சாந்தலர்கள்
எனப்படும் ராஜபுத்திரர்கள். இவர்களில் மன்னர் வித்யாதர், கஜினி முகமதுவை
எதிர்த்து நின்றவர். வித்யாதருக்கு, வீரத்தைப் போல கலைரசனையும் அதிகம் போல.
கஜுரஹோ கோவில்களுக்கும் சிற்பங்களுக்கும் முக்கிய காரணகர்த்தா இவர்தான் என
கருதப்படுகிறது. கஜுரஹோ கலைப்பொக்கிஷங்களை உருவாக்க மன்னர்கள் 100ஆண்டுகள் செலவிட்டனராம்.
இங்கு
கட்டப்பட்ட 80க்கும் மேற்பட்ட கோவில்களில், தற்போது எஞ்சியிருப்பவை
22கோவில்களே. எட்டு சதுர மைல் பரப்பளவில் விரிந்து எழுந்து நிற்கும்
கோவில்களை மேற்குப் பகுதி கோவில்கள், கிழக்குப் பகுதி கோவில்கள், தெற்குப்
பகுதி கோவில்கள் என மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர். இவற்றில்
பெரும்பாலானவை பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் தேவிகளுக்காக
அர்ப்பணிக்கப்பட்டவை.
இங்குள்ள லட்சுமணா கோவில் பிரசித்தம்.
விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோவிலில் காணப்படும் 'வைகுந்த
விஷ்ணு' உருவம் பரவசம் தரக்கூடியது. கோவிலின் வெளிப் பிரகாரத்தில்
600க்கும் மேற்பட்ட சிற்பங்கள் காணப்படுகின்றன.
இதே போல் வராஹா கோவிலும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள வீணையுடன்
காட்சி அளிக்கும் சரஸ்வதி, ஒன்பது கிரகங்களின் உருவங்கள்
குறிப்பிடத்தக்கவை. மேலும், கண்டரிய மகாதேவா கோவில், சௌன்ஸாத் யோகி கோவில்,
விஸ்வநாத் கோவில் போன்றவையும் முக்கியமானவை.
கோவில்களுக்குள்
பக்தி மணம் வீசும் தெய்வ ஓவியங்கள், சிற்பங்கள் நிறைய உள்ளன. காதல்
சிற்பங்கள் அனைத்தும் கோவில்களின் வெளிச்சுவர்களில் மட்டுமே என்பதும் இங்கு
இன்னொரு சிறப்பு. காதலைப் பற்றித் தெரியாதவர் கூட கஜுரஹோ சென்று வந்தால்
காதல் மன்னராகி விடுவர் என்றும் கூட வேடிக்கையாக சொல்லப்படுவது உண்டு.
கஜுரஹோ கலைச் சின்னங்களை உலக பண்பாட்டுச் செல்வமாக 1986ல் யுனெஸ்கோ
அறிவித்தது.
எப்போது செல்லலாம்? எப்படிச் செல்லலாம்?
அக்டோபர்-
ஏப்ரல் மாதங்கள், கஜுரஹோ செல்ல உகந்த மாதங்கள் ஆகும். மஹா
சிவராத்திரியன்று இங்கு நடக்கும் சிவ- பார்வதி கல்யாணம் சிறப்பு வாய்ந்தது.
பிப்ரவரி- மார்ச் மாதத்தில் இசை, நாட்டிய விழா நடத்தப்படுகிறது.
இதில் பல பகுதிகளில் இருந்தும் இசை, நாட்டிய ரசிகர்கள் திரளாக
பங்கேற்கிறார்கள். கஜுரஹோவில் தினமும் மாலையில் ஒளி, ஒலி காட்சிகள்
நடத்தப்படுகின்றன. இதில் கஜுரஹோவின் சிறப்பு பற்றி ஆங்கிலம் மற்றும்
இந்தியில் சுமார் ஒருமணி நேரம் விளக்கம் அளிக்கின்றனர்.
டெல்லி,
ஆக்ரா, வாரணாசி, காத்மண்டு ஆகிய இடங்களில் இருந்து கஜுரஹோவுக்கு தினசரி
விமானப் போக்குவரத்து உள்ளது. மஹோபா, ஹர்பல்பூர் ஆகியவை கஜுரஹோவுக்கு
அருகில் உள்ள ரயில்நிலையங்கள். மும்பை, டெல்லி, சென்னையில் இருந்து
வருபவர்களுக்கு ஜான்சி ரயில்நிலையம் வசதியானது. ஜான்சியில் இருந்து கஜுரஹோ
சுமார் 175 கி.மீ தொலைவில் உள்ளது.
-----------------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism |
 |
21.05.09 'மனைவி கட்டிய தாஜ்மஹால்' |
உலகளவில்
பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச்
சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச்
சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்தவாரம்....
'மனைவி கட்டிய தாஜ்மஹால்'
காதலும்,கலைரசனையும்
மொகலாயர்களின் உணர்வில் ஊறியது போலும். மனைவி மீது கொண்ட காதலால், அவரை
அடக்கம் செய்த இடத்தில் பளிங்கு மாளிகை எழுப்பினார் ஷாஜகான். அது,
தாஜ்மஹால்.
அன்புக்கணவர் ஹுமாயுன் நினைவாக, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்
கலையநயமிக்க மாளிகை ஒன்றை எழுப்பினார் ஹுமாயுனின் மனைவி ஹமீதாபானு பேகம்.
அது, ஹுமாயுன் கல்லறை (Humayun's Tomb). டெல்லியில் கிழக்கு நிஜாமுதீன்
பகுதியில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் ஹுமாயுன் கல்லறைதான் இந்தியாவில்
மொகலாயர் கட்டிய கலை ரசனைமிக்க முதல் கட்டடம். ஆம். இது மனைவி கட்டிய
தாஜ்மஹால்.
ஹுமாயுன்
என்கிற நஸ்ருதீன் ஹுமாயுன். பாபரின் புதல்வர். அக்பரின் தந்தை. இன்றைய
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வடஇந்தியப் பகுதிகளை ஆட்சி செய்தவர். கி.பி.
1530- 40வரையிலும் 1555- 56வரையிலும் ஹுமாயுன் ஆட்சி நடந்தது. 1556ல் தனது
நூலகத்தின் படிகளில் இருந்து தவறி விழுந்து எதிர்பாராத வகையில் மரணம்
அடைந்தார்.
அவரது
உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், மனைவி ஹமீதாபானு பேகம் விருப்பப்படி
கட்டடம் எழுப்பப்பட்டது. இதற்காக பாரசீக கட்டடக்கலை நிபுணர்களான சையத்
முகமது, அவரது தந்தை மிராக் கியாதுதீன் ஆகியோரை ஆப்கானிஸ்தான் ஹெரத் நகரில்
பிரத்யேகமாக வரவழைத்துள்ளனர். சுமார் 8ஆண்டுகளாக கட்டடப்பணி நடந்துள்ளது.
சதுரவடிவிலான அழகான நந்தவனங்கள், நீரோடைகள், நடுவே மாளிகை வடிவத்தில்
நினைவிடம் என பாரசீக பாணியில் கட்டி முடிக்கப்பட்டது. செக்கச்சிவந்த
சிவப்பு கற்கள், பளபளக்கும் பளிங்கு கற்கள் கலந்து உருவாக்கப்பட்ட இந்த
கட்டடம் இன்றளவும் அதே அழகுடன் காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது.
இதை கணவர் ஹுமாயுன் நினைவாக கட்டுவதற்கு உத்தரவிட்ட ஹமீதாபானு பேகம் இறந்தபிறகு அவரது உடலும் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டது.
தவிர, டெல்லியை ஆண்ட கடைசி மொகலாய மன்னரான இரண்டாம் பகதூர்ஷா உள்ளிட்ட பல
மன்னர்களின் கல்லறைகளும் இங்குள்ளன. 1857-ம் ஆண்டில் நடைபெற்ற கலகத்தின்
போது இரண்டாம் பகதூர்ஷா இங்கே மறைந்திருந்ததாகவும், அவரை லெப்டினென்ட்
ஹாட்சன் இங்கிருந்துதான் பிடித்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
வரலாற்று
நினைவுகளையும் வனப்புகளையும் தாங்கி நிற்கும் ஹுமாயுன் கல்லறை, 1993ம்
ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
எப்படிச் செல்வது?
டெல்லியிலேயே
இது அமைந்துள்ளதால் எங்கிருந்தும் எளிதாக சென்றடையலாம். நல்ல சாலை வசதி
உள்ளது. பிற பகுதிகளில் இருந்து நிஜாமுதீனுக்கு ரயில் வசதி இருக்கிறது.
டெல்லியில் சர்வதேச விமானநிலையம் அமைந்துள்ளது.
|
--------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism |
 |
14.05.09 சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்' |
உலகளவில்
பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச்
சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச்
சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்தவாரம்....
சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்'
சகலகலாவல்லவர்களான
சாளுக்கியர் கட்டடக்கலையையும் விட்டு வைக்கவில்லை என உணர்த்தும் இடம்
'பட்டாடகல்'. கர்நாடகத்தின் மாலப்பிரபா ஆற்றங்கரையில் வரலாற்றுச்
சிறப்புமிக்க ஆலயங்களை தாங்கி நிற்கும் நகரம். இங்கு கலைநயத்துடன்
சாளுக்கியர் எழுப்பிய 10ஆலயங்களை உலக பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ
1987-ல் அறிவித்தது. இவை ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில்
கட்டப்பட்டவை. சாளுக்கிய மன்னர்களின் முடிசூட்டு வைபவமும் இங்கு
நடந்திருப்பது இன்னொரு சிறப்பு.
விருபாக்ஷர் ஆலயம்:
சாளுக்கிய பேரரசி லோகமகாதேவி அமைத்த ஆலயம் இது. 'லோகேஸ்வரர்
ஆலயம்' என்றும் அழைக்கப்படுகிறது. தனது கணவர் இரண்டாம் விக்ரமாதித்தன்
பல்லவர்களை வென்றதன் நினைவாக இதை கட்டியிருக்கிறார். காஞ்சிபுரம்
கைலாசநாதர் ஆலயத்தை மாதிரியாகக் கொண்டு இது அமைக்கப்பட்டதாக
கூறப்-படுகிறது. லிங்கோத்பவர், நடராஜர், உக்கிர நரமிம்மர் சிற்பங்கள்
காணப்படுகின்றன.
சங்கமேஸ்வரர் ஆலயம்:
'விஜயேஸ்வரர் ஆலயம்' என்றும் அழைக்கப்படும் சங்கமேஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் சாளுக்கிய மன்னர் விஜயாதித்யா சத்யஸ்ரேயா. இந்த
ஆலயத்தில் திராவிட கட்டடக்கலை மிளிர்கிறது. உக்கிர நரசிம்மர், நடராஜர்
சிற்பங்கள் காணப்படுகின்றன. பிரதான கோபுரம் மூன்று அடுக்காக
அமைக்கப்பட்டுள்ளது.
மல்லிகார்ஜுனா ஆலயம்:
விருபாக்ஷர்
ஆலயத்தின் சிறிய வடிவம்தான் மல்லிகார்ஜுனா ஆலயம். விருபாக்ஷர் ஆலயம்
கட்டப்பட்ட புதிதிலேயே இதுவும் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
காட சித்தேஸ்வரர், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயங்கள்:
இவை இரண்டுமே சம காலத்தில் கட்டப்பட்டவை. காட சித்தேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் திரிசூலம் ஏந்திய சிவன் சிற்பம் சிறப்பு வாய்ந்தது.
பாபநாதர் ஆலயம்:
ராமாயண,
மகாபாரத காட்சிகளை சித்தரிக்கும் சிற்பங்கள் பாபநாதர் ஆலயத்தில் நிறைய
உள்ளன. இதே போல கல்கநாதா ஆலயம், ஜெயின் ஆலயம், நாகநாதர் ஆலயம், மகா
குட்டேஸ்வரர் ஆலயம் ஆகியவையும் பல வரலாறுகளை உணர்த்தி வருகின்றன.
எப்படிப் போகலாம்?
பெங்களூரில்
இருந்து சுமார் 495 கி.மீ தொலைவிலும், படாமியில் இருந்து 22 கி.மீ
தொலைவிலும் பட்டாடகல் அமைந்துள்ளது. சுமார் 24கி.மீ தொலைவில் படாமியில்
ரயில் நிலையம் இருக்கிறது. பெங்களூரில் சர்வதேச விமானநிலையம் உள்ளது.
பட்டாடகல்லில்
ஆண்டுதோறும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் சாளுக்யா உற்சவம் என்ற பெயரில்
மூன்று நாட்கள் நாட்டியவிழா நடத்தப்படுகிறது. வண்ணமயமான இவ்விழாவை
வரலாற்றுச் சிறப்பு கொண்ட ஆலயங்களின் பின்னணியில் பார்த்து ரசிப்பது பரவசம்
தரக்கூடியது.
-------------------------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism |
 |
07.05.09 வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம் |
உலகளவில்
பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ நிறுவனம் அவற்றை
பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள்
இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. அந்த வகையில்
இந்தியாவின் பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும்
பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம்
சென்னை அருகே உள்ள வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம். கல்லிலே கலைவண்ணம் கண்டபுரம். பல்லவர்கால துறைமுக நகரம். இங்குள்ள
புடைப்புச்சிற்பங்களும், கோவில்களும் உலகப்புகழ் பெற்றவை. தெய்வங்களின்
உருவங்கள், புராணக்கதை காட்சிகள், சமுதாய நிகழ்வுகள் இங்கு சிற்பங்களாக
சிலிர்த்துக் கொண்டிருக்கின்றன.
கடற்கரை கோவில்:
மாமல்லபுரம்
என்றவுடனேயே அலைகள் தொட்டுச் செல்லும் கடற்கரை கோவில்தான் முதலில்
நினைவுக்கு வரும். இது இரண்டு சிவன்கோவில்களை உள்ளடக்கியதாகும். இவை கி.பி.
700- 728க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை. ஆனந்தமும், ஆன்மீகமும்
தழுவும் இடம் இந்தக் கடற்கரைக் கோவில்.
பஞ்ச ரதம்:
பஞ்ச ரதம் என்றழைக்கப்படும் ஐந்து ரதங்கள் கி.பி. 7ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை.
முதலாம் மகேந்திரவர்மன், அவரது மகன் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தைச்
சேர்ந்தவை. நிஜத்தேர் போன்று காணப்படும் கோவில் வடிவிலான இந்த ரதங்கள்
ஒவ்வொன்றும் ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டவை. இவற்றுக்கு தர்மராஜ ரதம், பீம
ரதம், திரௌபதி ரதம், நகுல- சகாதேவ ரதம் என பஞ்ச பாண்டவர்களின் பெயர்கள்
சூட்டப்பட்டுள்ளன. தர்மராஜ ரதத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், அழகும்
ஆச்சரியமும் கலந்தது. கோவில்களின் மாதிரிக்காக பஞ்ச ரதங்கள்
அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
அர்ச்சுனன் தபசு:
சுமார் 30மீட்டர் உயரம், சுமார் 60மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள்  செதுக்கப்பட்ட
பாறையே அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்-படுகிறது. வானவர்கள், மனிதர்கள்,
மிருகங்கள் எல பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஏதோ ஒரு புராணக்கதை
அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டிக்கலாம் என தெரிகிறது. ஒற்றைக்காலில்
நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே சூலாயுதம் ஏந்திய சிவன் பூதகணங்கள்
சூழநின்று வரம் கொடுப்பதாக சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இது பாசுபத
அஸ்திரம் பெறுவதற்காக சிவனை நோக்கி அர்ச்சுனன் தவமிருந்ததை குறிப்பதால்
அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்படுவதாக ஒரு கருத்தும் உண்டு.
மகிஷாசுரமர்த்தினி சிற்பம்:
கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் வழியில் குன்றின்
மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி
சிற்பம் சிறப்பு வாய்ந்தது. மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படும் சக்தி,
மகிஷாசுரனை வதம் செய்ய பத்து கைகளுடன் தோன்றும் காட்சி இங்கு
சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும்
மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து
நிற்கும் காட்சி தத்ரூபம்.
 இவை
தவிர வராகமூர்த்தி சிற்பம், கோவர்த்தன மலை சிற்பம் போன்றவையும் நிறைய
ஆச்சரியங்கள் கொண்டவை. இப்படி சிறப்பு வாய்ந்த மகாபலிபுர
நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக 1984ல் யுனெஸ்கோ
அறிவித்தது.
எப்படிப் போகலாம்?
சென்னையில் இருந்து சுமார் 60கி.மீ தொலைவிலும்,
பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 250
கி.மீ தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. ரயிலில் வருவோர்
செங்கல்பட்டில் இறங்கி விட்டால் அங்கிருந்து 30கி.மீ தூர பயணம்தான்.
சென்னை, திருச்சியில் சர்வதேச விமானநிலையம் உள்ளது. டிசம்பர்- ஜனவரி
மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு
சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில்
நடத்தப்படுகிறது.
|
-----------------------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism |
 |
30.04.09 வெற்றித்திருநகர் ஹம்பி |
கர்நாடக மாநிலம் துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ள அழகான கிராமம்
ஹம்பி. விஜயநகரப்பேரரசின் தலைநகராக விளங்கிய விஜயநகரத்தின் ஓர் அங்கம்.
பிரசித்தி பெற்ற சிவாலயமான விரூபாக்ஷா கோவில், ஹம்பியின் இன்னொரு அடையாளம்.
இன்னும் பல அடையாளச் சின்னங்கள் ஹம்பியில் உண்டு. ராமாயணத்தில்
இடம்பெற்றுள்ள குரங்குகளின் ராஜ்ஜியமான கிஷ்கிந்தாவுக்கும் ஹம்பிக்கும்
தொடர்பு உண்டாம். ஹம்பியில் மக்கள் குடியேற்றம் கி.பி.முதலாம் ஆண்டில்
தொடங்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. விஜயநகர ஆட்சியில் ஹம்பியில்
பெரிய கட்டிடங்கள், பிரம்மாண்டமான விக்ரகங்கள் எழுப்பப்பட்டன.
தொலைதூரத்தில் இருந்து பார்த்தாலும் அவற்றைக் காணமுடியும். ஆனால் அவற்றில்
பெரும்பாலானவை இப்போது இல்லை.
ஹம்பியின்
தெய்வீக அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் விரூபாக்ஷா கோவில் மிகவும்
பழமையானது. மூன்று கோபுரங்களைக் கொண்டது. கோவிலை சீரமைத்து மண்டபம்
கட்டியவர் கிருஷ்ணதேவராயர். விஜயநகர மன்னர்களின் குலதெய்வம் விரூபாக்ஷர்
என்பது குறிப்பிடத்தக்கது. ஹம்பியில் உள்ள விட்டல் கோவிலும்
கிருஷ்ணதேவராயர் கட்டியதே. கலைநுணுக்கத்துடன் கூடிய சிற்பங்கள் இங்குள்ளன.
இதே போல கோதண்டராமர் கோவில், தாமரை கோவில் போன்றவையும் சிறப்பு வாய்ந்தது.
ஹம்பியில் உள்ள நினைவுச்சின்னங்கள் 1986ம் ஆண்டில் யுனெஸ்கோ சார்பில் உலகப்
பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.
எப்போது போகலாம்? எப்படிப் போகலாம்?
ஹம்பியில்
ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் கர்நாடக அரசு சார்பில் விஜயநகர விழா
நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அக்டோபர் - மார்ச் மாதங்கள் வரை சுற்றுலாப்
பயணிகள் அதிகமாக வருகிறார்கள். பெங்களூருவில் இருந்து சுமார் 350 கி.மீ
தொலைவில் ஹம்பி அமைந்துள்ளது. பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகாவின் முக்கிய
நகரங்களான ஹாசன், மைசூர் போன்ற இடங்களில் இருந்தும் ஹம்பிக்கு நல்ல
சாலைவசதி இருக்கிறது. ஹம்பியில் இருந்து சுமார் 13கி.மீ தொலைவில் உள்ள
ஹோஸ்பேட் வரை ரயில்வசதி உண்டு. பெங்களூருவில் சர்வதேச விமானநிலையம் உள்ளது.
----------------------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism |
 |
25.04.09 சோழரின் கலைப்பொக்கிஷங்கள் |
உலகளவில்
பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ நிறுவனம் அவற்றை
பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள்
இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. அந்த வகையில்
இந்தியாவின் பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும்
பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
சோழரின் கலைப்பொக்கிஷங்கள்
சொக்க
வைக்கும் கட்டடக்கலைக்கு சொந்தக்காரர்களில் சோழமன்னர்கள்
முக்கியமானவர்கள். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம்
சோழீஸ்வரர் கோவில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் ஆகியவை சோழரின்
கலைப்பொக்கிஷங்களாக இன்றளவும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. மூன்றுமே உலகப்
பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டிருப்பது உலகளாவிய
பெருமை.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்:
தஞ்சைப்
பெரிய கோவில், தஞ்சைப் பெருவுடையார் கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர்
கோவில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகும். கட்டிய புதிதில் ராஜ ராஜேஸ்வரம்
என்றும், பின்னர் வந்த நாயக்கர்கள் காலத்தில் பெருவுடையார் கோவில் என்றும்
மராட்டிய மன்னர்கள் காலத்தில் பெரிய கோவில் என்றும் அழைக்கப்பட்டு
வந்துள்ளது.
பரந்த
விரிந்து கிடந்த சோழப்பேரரசுக்கு கிடைத்துக் கொண்டிருந்த தாரளமான வருவாய்,
ஆள்பலம், ராஜ ராஜனின் தீவிர சிவபக்தி போன்றவையே கோவில் பிரம்மாண்டமாக
எழுந்து நிற்பதற்கு முக்கிய காரணங்களாகும். இதன் கட்டுமானப்பணி
கி.பி.1003-ம் ஆண்டில் தொடங்கி கி.பி.1010-ம் ஆண்டில் ஏழு ஆண்டுகளில்
முடிக்கப்பட்டுள்ளது.
சிவலிங்கம்
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிரதான கோவில் தவிர சண்டிகேஸ்வரர், அம்மன்,
சுப்பிரமணியர், கணபதி, கருவூர்த்தேவர் கோவில்களும் இங்குள்ளன. கோபுரத்தின்
மீதுள்ள மிகப்பெரிய விமானமும், 14மீட்டர் உயரம், 7மீட்டர் நீளம், 3மீட்டர்
அகலம் கொண்ட ஒரே கல்லில் செய்யப்பட்ட நந்தியும் இன்றளவும் நீடிக்கும்
ஆச்சரியங்கள். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என
கருதப்படுகிறது.
கோவிலைக்
கட்டி முடித்த பிறகும் தனி அக்கறை செலுத்திய ராஜராஜன், கோவிலின் அன்றாடப்
பணிகளுக்காக ஏராளமான பூசகர்கள், ஓதுவார்கள், பணியாளர்களை நியமித்துள்ளான்.
50ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோவிலில் இருந்ததாக கல்வெட்டுச்
சான்றுகள் கூறுகின்றன.
கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவில்:
இது
ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோவிலாகும். தற்போதைய
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோவில் கட்டி
முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் இது கட்டப்பட்டதாம். தஞ்சைப் பெரிய
கோவில் மிடுக்கு என்றால் இது நளினம். அழகும், ஆச்சரியமும் கலந்த புதினம்.
கோவில்
அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் நகரத்தின் பின்னணியும் சுவாரஸ்யம்
நிறைந்தது. கங்கை உள்பட இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதி முழுவதையும்
வென்ற ராஜேந்திர சோழன், கங்கைகொண்ட சோழன் என அழைக்கப்பட்டான். அதன்
நினைவாகவே கங்கைகொண்ட சோழபுரம் என இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. அப்போதுதான்
சிவன் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனுக்கு பிறகு கங்கைகொண்ட
சோழபுரம் சோழர்களின் தலைநகராகவும் திகழ்ந்துள்ளது.
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்:
கும்பகோணம்
அருகே தாராசுரம் என்ற ஊரில் ஐராவதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது
இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்ட கோவில் என்றாலும் அவனது முன்னோர்களான
ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் பின்பற்றிய மகேஸ்வர சிவம் (பெரும் கடவுள்
சிவனே) என்ற தத்துவம் இங்கு காணப்பட-வில்லை.
மாறாக,
பெண்ணின் பெருமையை உணர்த்தும் வகையில் அமைக்கப்-பட்டுள்ளது. இங்கு
அம்மனுக்காக தனி சன்னதி உள்ளது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கோவிலின் மேற்கூரைகளிலும், சுவர்-களிலும் நடன மங்கைகளின் சிற்பங்கள்
காணப்-படுகின்றன.
தஞ்சைப் பெரிய கோவில் 1987ம் ஆண்டிலும்,
கங்கைகொண்ட சோழபுரம் கோவில் மற்றும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்கள்
2004ம் ஆண்டிலும் யுனெஸ்கோ சார்பில் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக
அறிவிக்கப்பட்டு, இன்றும் வாழும் பெருங்கோவில்கள் என்ற பெருமையைப்
பெற்றுள்ளன.
எப்படிப் போகலாம்?
சென்னையில்
இருந்து தஞ்சாவூர் சுமார் 350 கி.மீ தூரம். முக்கிய நகரங்களில் இருந்து
தஞ்சாவூருக்கு நல்ல சாலை வசதி உண்டு. ரயில்நிலையம் அமைந்துள்ளது.
திருச்சியில் விமானநிலையம் உள்ளது. திருச்சி- தஞ்சாவூர் சுமார் 65 கி.மீ
தூரம்.
|
-----------------------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism |
 |
16.04.09 சென்டிமென்ட்+சுவாரஸ்யம் = பதேபூர் சிக்ரி |
உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் பெருமை
மிக்க நகரம் பதேபூர் சிக்ரி. இதை உருவாக்கியவர் மொகலாயச் சக்கரவர்த்தி
அக்பர். பதேபூர் சிக்ரி 1571- 1585ம் ஆண்டு வரை மொகலாயப் பேரரசின்
தலைநகரமாகவும் திகழ்ந்-துள்ளது. இதன் பின்னணி, சென்டிமென்ட் கலந்த
சுவாரஸ்யம்.
1560ம்
ஆண்டு வரை ஆக்ரா கோட்டைதான் மொகலாயப் பேரரசின் தலைநகரம். அப்போது
ராஜபுத்திர இளவரசியான இந்துப்பெண் ஹர்கா பாய் என்பவரை மணந்து கொண்டார்
அக்பர். ஹர்காபாய்தான் பின்னாளில் மரியம்-உல்- ஷமானி பேகம் (ஜோதாபாய்
அக்பர்) ஆனார்.
 அக்பர்-
மரியம் உல் ஷமானி பேகம் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆனால்
இரண்டும் குழந்தைப்-பருவத்திலேயே இறந்து விட்டன. சோகத்தில் இருந்த
அக்பருக்கு சூஃபி ஞானி சலீம் சிஷ்டி என்பவர் ஆறுதல் கூறினார். இன்னொரு
குழந்தைக்கு வாய்ப்பு உண்டு என ஆசீர்வதித்தார்.
அவர் சொன்னது போலவே அக்பர் தம்பதிக்கு இன்னொரு
குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியிடைந்த அக்பர் அந்த ஞானியின் நினைவாக
குழந்தைக்கு நூருதீன் சலீம் ஜஹாங்கீர் என பெயரிட்டார். அந்தக்குழந்தைதான்
பின்னாளில் ஜஹாங்கீர் சக்கரவர்த்தி ஆனது.  மேலும்
ஞானி சலீமை கவுரவப்படுத்தும் வகையில் சலீம் வசித்து வந்த பதேபூரில்,
அரண்மனையையும் நகரையும் உருவாக்கினார் அக்பர். புதிய கட்டடங்கள்
கலைநயத்துடன் எழுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து மொகலாயப் பேரரசின்
தலைநகரையும் பதேபூர் சிக்ரிக்கு மாற்றினார் அக்பர். அக்பரின் அமைச்சரவையில்
நவரத்னங்களாகப் போற்றப்பட்ட பீர்பால் உள்ளிட்ட ஒன்பது அமைச்சர்களின்
ராஜாங்கமும் இங்குதான் நடந்துள்ளது. இவற்றையெல்லாம் நினைவு கூறும்
வகையில்தான் அழகும், கலைத்திறனும் கூடிய கட்டடங்கள் இன்றளவும் பதேபூர்
சிக்ரியில் பளபளத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பொதுமக்களை மன்னர்
சந்திக்கும் திவான்-ஐ-ஆம் ஹால், பிரதிநிதிகளை சந்திக்கும் திவான்-ஐ- காஸ்
ஹால், பீர்பால் ஹவுஸ், மரியம் உல் ஷமானி (ஜோதா அக்பர்) அரண்மனை, ஐந்தடுக்கு
மாளிகையான பஞ்ச் மஹால், ஜும்மா மஸ்ஜித், டாம்ப் ஆப் சலீம் சிஷ்டி, புலந்த்
தர்வாஸா போன்ற கட்டடங்கள்  முக்கியமானவை. பதேபூர் சிக்ரியை 1986ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ.
எப்படிப் போகலாம்?
ஆக்ராவில்
இருந்து சுமார் 40கி.மீ தொலைவில் பதேபூர் சிக்ரி நகரம் உள்ளது. சாலை
மார்க்கமாவும் செல்லலாம். ஆக்ராவில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள்
இயக்கப்படுகின்றன. ஆக்ராவில் இருந்து ரயிலிலும் போகலாம். ஆக்ராவில் விமான
நிலையம் உள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism |
 |
|
09.04.09 ஒற்றைக்கல் அதிசயம் எல்லோரா |
உலகளவில்
பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ நிறுவனம் அவற்றை
பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள்
இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. அந்த வகையில்
இந்தியாவின் பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும்
பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
ஒற்றைக்கல் அதிசயம் எல்லோரா
ஒற்றைக்கல்லில்
உருவான அதிசயமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது எல்லோரா. மராட்டிய
மாநிலம் அவுரங்காபாத் நகரில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் காணப்படும்
பொக்கிஷமிது. இங்குள்ள 34குகைகளில், கைலாசநாதர் கோவில், ஒற்றைக்கல்லில்
உருவான உலகின் மிகப்பெரிய குடைவரைக்கோவில் ஆகும்.
சிவபெருமானின்
இருப்பிடமான கைலாசமலையை குறிப்பிடும் வகையில், பல மாடிகளைக் கொண்ட கோவில்
வளாகம் போல உருவாக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு. தனிப்பாறையைக் குடைந்து
இவற்றை உருவாக்கியிருப்பது பிரம்மிப்போ பிரம்மிப்பு.
இந்துக்
கோவில்கள் மட்டுமின்றி பவுத்தம், சமண மதக்கோவில்களும் காணப்படுகின்றன.
அனைத்தும் கி.பி.5- கி.பி.10ம் நூற்றாண்டுகளுக்கு இடையே அமைக்கப்பட்டவை.
சாளுக்கியர்கள் மற்றும் ராஷ்டிர-கூடர்களின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவை.
மத
நம்பிக்கைகள், கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட மன்னர்களும், பெரும் வணிகர்களும்
கோவில்கள் உருவாக பெரும் பொருளுதவி செய்திருக்கிறார்கள். பணிகள் முழுமை
பெற ஐந்து நூற்றாண்டுகள் ஆனதாம். பிரம்மாண்டமான செங்குத்தான பாறைகளைக்
குடைந்து தலைமுறை தலைமுறையாக பணியாற்றி உருவாக்கியிருக்கிறார்கள். அதனால்தான் என்னவோ, எல்லோராவில் எங்கு நோக்கினும் கலைகள், ஆச்சரிய அலைகள்!.
ஐந்து
குகைகளில் சுவரோவியங்களும் உள்ளன. இவற்றில் விஷ்ணு, லட்சுமி உருவங்கள்
முக்கியமானவை. சுவரோவியங்களில் சில, குகைகளைக் குடைந்த புதிதில்
தொடங்கப்பட்டு நூற்றாண்டு கடந்த பிறகு முடிக்கப்பட்டவை.
சிறப்புமிக்க எல்லோரா குகைகள் 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ சார்பில் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
எப்போது போகலாம்? எப்படிப் போகலாம்?
மராட்டிய
மாநில சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 3வது வாரத்தில்
எல்லோரா திருவிழா இங்கு நடத்தப்பட்டு வருகிறது. இசை, நடன நிகழ்ச்சிகள் என
விழா களைகட்டும். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இது தவிர
மழைபெய்யும் பருவகாலங்களிலும் ஏராளமானோர் வருகிறார்கள். எல்லோரா குகைகளைச்
சுற்றியுள்ள பகுதிகளில் சலசலக்கும் நீரோடைகள், பச்சைப்பசேல் காட்சிகளை கண்டு ரசிப்பதற்காகவே இந்த மழைக்கால வருகையாம்.
அவுரங்காபாத்
வரை நல்ல சாலை வசதி உள்ளது. மும்பை, புனே, நாசிக், அகமதாபாத், ஐதராபாத்,
இந்தூர், பிஜப்பூர் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து அவுரங்காபாத்துக்கு
அரசு பஸ்களும் இயக்கப்படுகின்றன. அவுரங்காபாத்தில் ரயில்நிலையம், விமான
நிலையமும் உள்ளது. இங்கிருந்து டாக்சி பிடித்து எல்லோரா சென்று விடலாம்.
|
|
|
--------------------------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism |
 |
02.04.09 ஆச்சரியம் நிறைந்த எலிபண்டா |
உலகளவில்
பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ நிறுவனம் அவற்றை
பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள்
இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. அந்த வகையில்
இந்தியாவின் பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும்
பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
ஆச்சரியம் நிறைந்த எலிபண்டா
இந்தியாவின் புகழ் பெற்ற குடைவரைக் கோவில்களில் எலிபண்டா குகைகள் முக்கியமானவை. கூடவே... இவற்றில் புதைத்-திருக்கும் தகவல்களும் ஆச்சரியமானவை. மும்பை
கடற்கரையில் இருந்து சுமார் 10கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகான தீவு
எலிபண்டா. காராப்புரி தீவு என்றும் அழைக்கின்றனர். 17ம் நூற்றாண்டில்
போர்ச்சு-கீசியர்களால் கண்டறியப்பட்டது. எலிபண்டா குகைகளில் பலவிதமான
புடைப்புச் சிற்பங்களும், சிலைகளும் காணப்படுகின்றன. இவற்றில் திரிமூர்த்தி
என்றழைக்கப்படும் சிவன் சிலை அபூர்வமானது. மும்மூர்த்திகளான பிரம்மா,
விஷ்ணு, சிவன் ஆகியோர்களின் முகங்களை இவை குறிப்பிடுவதாக கருதப்படுகிறது.
ராஷ்டிரகூடர்களின் அரசுச் சின்னமும் இதுதான் என்பது இன்னொரு ஆச்சரியம். இவை
தவிர நடராசர், சதாசிவன், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளும் காணப்படுகின்றன.
இவையும் ராஷ்டிரகூடர்களின் காலத்தை சேர்ந்தவையே.
தீவைக்
கண்டுபிடித்த போர்ச்சுகீசியர்களை, தீவின் முகப்பில் காட்சியளித்துக்
கொண்டிருந்த ஒற்றைக்கல்லில் ஆன யானை சிலை வெகுவாக கவர்ந்துள்ளது. அதை
எடுத்துச்செல்ல முயன்றுள்-ளனர். அது முடியாமல் போகவே அப்படியே விட்டுச்
சென்று விட்டனராம். பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் அந்த யானைச்சிலையை, மும்பை
விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்துக்கு (தற்போதைய டாக்டர் பாவ் தஜி லாட்
மியூசியம்) கொண்டு சென்று வைத்துள்ளனர்.
யானைச்சிலை ஞாபக-மாகத்தான் எலிபண்டா தீவு என போர்ச்சுகீசியர்கள் அழைத்து
வந்துள்ளனர். மேலும் இதை துப்பாக்கி சுடும் களமாகப் பயன்படுத்திய
போர்ச்சு-கீசியர்கள், சுடுவதற்கு இலக்காக சிலைகளை(?) பயன்படுத்தியதாகவும்
கூறப்-படுகிறது. அதனால்தான் பல சிலைகள் இங்கு சிதைந்து காணப்படுகின்றன.
வரலாற்று
சிறப்புகொண்ட எலிபண்டா தீவு பல பேரரசுகளின் பகுதியாகவும் விளங்கி
வந்துள்ளது. கொங்கன்-மவுரியர்கள், திரிகூடர்கள், சாளுக்கியர்கள்,
ராஷ்டிரகூடர்கள், அகமதாபாத்தின் முஸ்லிம் மன்னர்கள், மராட்டியர்கள் என
பலதரப்பினரின் கட்டுப்பாட்டில் இது இருந்து வந்துள்ளது. ஷென்ட்பந்தர்,
மோராபந்தர், ராஜ்பந்தர் என மூன்று கிராமங்கள் இங்குள்ளன.
ஷென்ட்பந்தரில்தான் குகைகள் அமைந்திருக்கின்றன. மோராபந்தர் அடர்ந்த
காட்டுப்பகுதியாகும்.
 ஆச்சரியங்களைக்கொண்ட,
அழகான எலிபண்டா தீவுக்கு படகில்தான் செல்ல முடியும். மும்பையின் கேட்வே
ஆப் இந்தியா பகுதியில் உள்ள அப்போலோ பந்தரில் இருந்து சுமார் ஒரு மணி
நேரத்திற்குள் படகில் சென்று விடலாம். காலை 9மணி முதல் மாலை 5மணி வரைதான்
குகைகளைக் காண அனுமதி. கட்டணம் உண்டு. யுனெஸ்கோவின் உலக
பண்பாட்டுச்சின்னங்கள் பட்டியலில் எலிபண்டா குகைகள் 1987ம் ஆண்டில் இடம்
பிடித்தன.
------------------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism |
 |
26.03.09 வா..வா..என்றழைக்கும் கோவா |
ரசிக்க வைக்கும் கடற்கரையைக் கொண்ட கோவாவில் தரிசிக்க வைக்கும்
தலங்களும் நிறைய உண்டு. இவற்றில் பாரம்பரியமிக்க தேவாலயங்களும் அடக்கம்.
இந்த தேவாலயங்கள் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு கோவாவை
மேலும் மிளிர வைத்துக்-கொண்டிருக்கின்றன. கோவாவைப் பற்றிய
குறிப்புகள் வரலாற்றில் 3ம் நூற்றாண்-டிலேயே காணப்படுகின்றன. மவுரியப்
பேரரசின் ஒரு பாகமாக இது இருந்து வந்துள்ளது. தொடர்ந்து சாளுக்கியர்கள்,
டெல்லி சுல்தான்கள், விஜயநகர மன்னர்கள், போர்ச்சுகீசியர்கள் என பல
தரப்பினரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.
போர்ச்சுகீசியர்களின்
ஆளுகையின் போது பல தேவாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதில் பழைய கோவாவில்
கட்டப்பட்ட தேவாலயங்கள் முக்கியமானவை. சே கதீட்ரல், சர்ச் அண்ட் கான்வென்ட்
ஆப் செயின்ட் பிரான்சிஸ் ஆப் அசிசி, சேப்பல் ஆப் செயின்ட் காதரின்,
பாசிலிகா ஆப் போம் ஜீசஸ், சர்ச் ஆப் லேடி ஆப் ரோசரி, சர்ச் ஆப் செயின்ட்
அகஸ்டின் போன்றவை பாரம்பரியமிக்கவை. அனைத்தும் 16- 17ம் நூற்றாண்டுகளில்
கட்டப்பட்டவை. இவை அழகிய கலை வேலைப்பாடுகள் கொண்டவை. போம் ஜீசஸ் சர்ச்
அதாவது குழந்தை இயேசு தேவாலயம், ஆசிய அளவில் புகழ்பெற்றதாக விளங்கி
வருகிறது. இந்த தேவாலயங்கள் 1986ம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய
சின்னமாக அறிவிக்கப்பட்டன.
இவை
தவிர கோவா மாநிலம் முழுவதும் பார்த்து ரசிக்க நிறைய இடங்கள் உள்ளன.
தலைநகர் பனாஜியில் செபாஸ்டியான் சாப்பல், ஜும்மா மசூதி, மஹாலட்சுமி கோவில்
போன்றவையும் பனாஜியில் இருந்து 28கி.மீ தொலைவில் உள்ள ஆன்மீக நகரமான
போன்டாவில் நாகேஸ் கோவில், மஹால்ஸா நாராயணி கோவில், சாந்தா துர்கா கோவில்,
ஸ்ரீமங்கேஷ் கோவில், தூத்சாகர் பால்ஸ் (பாலருவி), போன்ட்லா வனவிலங்கு
சரணாலயம், பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயம் போன்றவையும் பிரபலமானவை.
மப்பூசா, வாஸ்கோடகாமா (இடத்தின் பெயர்தான்), மார்கோ போன்ற இடங்களும்
சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவை.
ஒரு முறை சென்று வந்தால் போதும். மீண்டும் வா..வா..என்றழைக்கும் கோவா.
|
------------------------------------------------------------------------------------------------------------
|
|
|
|
|
No comments:
Post a Comment