உழைப்புக்கும்,
வர்த்தகத்திற்கும் பெயர் பெற்றது விருதுநகர் மாவட்டம். சமையல் எண்ணெய்,
பருத்தி, மிளகாய், ஏலக்காய், நறுமணப்பொருட்கள் என பல்வேறு நுகர்பொருட்கள்
இந்த மாவட்டத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
சிறப்பு மிக்க விருதுநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பார்க்கத்தகுந்த
பல இடங்கள் உள்ளன.
சிவகாசி: குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் தயாரா கும்
பட்டாசுகள் உலக அளவில் பிரபலமானவை. தீப்பெட்டி உற்பத்தியும், நவீன அச்சுத்
தொழிலும் இங்கு பிரசித்தம். வானத்தில் வர்ணஜாலம் காட்டும் பட்டாசுகள்
தயாராகும் முறைகளை இங்கு நேரில் பார்க்கலாம்.
ரமண மகரிஷி ஆசிரமம்: பகவான்
ஸ்ரீரமண மகரிஷி அவதரித்த திருச்சுழி இங்குதான் உள்ளது. ரமணர் பெயரால்
இங்குள்ள குண்டாற்றங்கரையில் ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சுழியில்
ரமணர் வாழ்ந்த வீடு ‘சுந்தர மந்திரம்’ என்றழைக்கப்படுகிறது. ரமணரின்
கருத்துக்களால் கவரப்பட்டவர்கள் கண்டிப்பாக வந்து செல்லவேண்டிய இடம் இது.
திருத்தங்கல்: வரலாற்று
சிறப்பு மிக்க நகரம். முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என தமிழின்
மூன்று சங்கங்களிலும் இடம் பெற்ற புலவர்களான முடக்கூரனார், போர்க்கோலன்,
வெண்ணாகனார், ஆதிரேயன் செங்கண்ணனார் ஆகியோர் வாழ்ந்ததாக சொல்லப்படும் இடம்.
அணில்கள் சரணாலயம்:
செண்பகத்தோப்பு
காட்டு அணில் சரணாலயம் இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும். சாம்பல் நிற
காட்டு அணில்களை இங்கு பார்க்கலாம். புலி, சிறுத்தை, நீலகிரி நீண்ட வால்
குரங்கு, புள்ளிமான், தேவாங்கு போன்ற உயிரினங்களும் உண்டு.
இருக்கன்குடி மாரியம்மன் கோவில்:
பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சாத்தூரில் இருந்து 8 கி.மீ தொ லைவில் உள்ளது. இங்குள்ள அம்மனை வழிபட்டால் அம்மை உள்பட பல்வேறு நோய்கள் நீங்கும் என்பது காலந்தொட்டு வரும் நம்பிக்கை.
சவேரியார் தேவாலயம்:
புனித
பிரான்சிஸ் நினைவாக பிரான்சிஸ் அசோசியேஷனால் கட்டப்பட்ட தேவாலயம். இதன்
சுவர்களில் ஏழு குதிரை பூட்டப்பட்ட தேரில் ஸ்ரீகிருஷ்ண பகவான் வருவது
போலவும், இஸ்லாமை குறிக்கும் பிறை நிலவும் பொறிக்கப்பட்டு மத நல்லிணக்கத்தை
உணர்த்துகிறது.
ஆண்டாள் கோவில்:
பிரசித்தி
பெற்ற ஆண்டாள் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ளது. திருப்பாவை
பாடிய ஆண்டாளின் பெருமையை உணர்த்தும் திருத்தலம். இந்த கோவிலின்
கோபுரம்தான் தமிழ்நாடு அரசாங்கத்தின் இலச்சினையாக அமைந்துள்ளது.
இவை
தவிர அய்யனார் அருவி, திருமேனிநாத சுவாமி கோவில், கல்விக்கண் திறந்த
காமராஜர் நினைவு இல்லம் என பார்க்கத் தகுந்த பல இடங்கள் விருதுநகர் மற்றம்
சுற்றுப் பகுதிகளில் உள்ளன.
-------------------------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism |
 |
28.12.11 குளுகுளு குற்றாலம் |
மேற்குத்
தொடர்ச்சி மலையில் அருவிகள் ஆர்ப்பரித்துக் கொட்டும் குளுகுளு பகுதியே
குற்றாலம். திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம்
தென்னிந்தியாவின் ‘ஸ்பா’ என்றும் அழைக்கப்படுகிறது. காடு, மலைகளைக் கடந்து
வரும் தண்ணீர் பல்வேறு மூலிகைச் செடிகளையும் தழுவி வந்து அருவியாக
கொட்டுவதால் இயற்கையிலேயே நோய்தீர்க்கும் குணம் கொண்டது என்பதும் ஒரு
நம்பிக்கையாகும். குற்றாலத்தில் ஒன்பது அருவிகள் உள்ளன.
முக்கியமான பேரருவியே குற்றால அருவி என்றழைக்கப்படுகிறது. இங்கு சுமார் 288
அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற துறையில் விழும் தண்ணீர்
பொங்கியெழுந்து விரிந்து பரந்து கீழே விழு  கிறது.
பேரருவிக்கு சற்று மேலே சென்றால் சிற்றருவி. பெயருக்கு ஏற்றாற்போல சிறிய
அருவிதான். பேரருவியில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில்
செண்பகாதேவி அருவி உள்ளது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில்
இருக்கிறது. சித்ரா பவுர்ணமி நாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் தேனருவி உள்ளது. இங்கு ஏராளமான
தேன்கூடுகள் உள்ளதால் தேனருவி என்று பெயர் பெற்றதாக கூறுகின்றனர். தேனருவி
அருகே பாலருவி உள்ளது. குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கிலோ
மீட்டர் தொலைவில் ஐந்தருவி அமைந்துள்ளது. இங்கு ஐந்து கிளைகளாக பிரிந்து
அருவி கொட்டுவதால் ஐந்தருவி எனப் பெயர்பெற்றது. ஐந்தருவிக்கு அருகே
பழத்தோட்ட அருவி என்றழைக்கப்படும் வி.ஐ.பி அருவி உள்ளது. இங்கு முன் அனுமதி
பெற்ற முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டுமே குளிக்க அனுமதி. குற்றாலத்தில்
இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் புலியருவியும், சுமார் 15 கி.மீ தொலைவில்
பழைய குற்றாலம் அருவியும் உள்ளது. தென்மேற்கு பருவ காலம்
தொடங்கியவுடன் ஜூன் மாதத்தில் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து விழத் தொடங்கி
விடும். ஆகஸ்ட், செப்டம்பர் வரை இங்கு சீசன் காலம்தான். தமிழக அரசு
சார்பில் கலைநிகழ்ச்சிகளுடன் சாரல் வி  ழாவும்
குற்றாலத்தில் நடத்தப்படுகிறது. குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர்
(சிவன்) கோவில் உள்ளது. திரிகூட ராசப்பக் கவிராயர் பாடிய குற்றாலக்
குறவஞ்சியின் நாயகர் இந்த குற்றால நாதர்தான். அருவிகள்
ஆர்ப்பரிக்கும் குற்றாலம், மதுரையில் இருந்து சுமார் 160 கி.மீ தொலைவில்
தென்காசியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. தங்குவதற்கு தனியார்
விடுதிகளும், பேரூராட்சி விடுதிகளும் உள்ளன. குற்றாலக் குளியல்
உற்சாகத்தின் புதையல் என்பது அதனை அனுபவித்தவர்களின் கருத்தாகும்.
|
-------------------------------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism |
 |
14.01.11 காசிரங்கா தேசியப்பூங்கா |
இந்தியாவின் பெருமைக்குரிய அரியவகை 'ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள்' உலவும் இடம் காசிரங்கா தேசியப் பூங்கா.
அசாம்
மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிப் படுகையில் இது அமைந்துள்ளது. உலகின்
ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு இங்குதான்
உள்ளதாம். இவை தவிர யானைகள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் அரியவகை
பறவையினங்களையும் காசிரங்காவில் காணமுடியும்.
காசிரங்கா தேசியப் பூங்கா உருவானதன் பின்னணி
சுவாரஸ்ய-மானது. பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் கர்சன்பிரபுவின் மனைவி
மேரி விக்டோரியா 1904ஆம் ஆண்டில் தற்போதைய காசிரங்கா பகுதிக்கு வந்தார்.
அரியவகை மிருகங்களை பார்த்து ஆச்சரியப்-பட்டுப் போன அவர், தனது கணவர்
கர்சன் பிரபுவிடம் அந்த அரியவகை மிருகங்களை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 1905ஆம் ஆண்டில்
காசிரங்கா காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.
சுமார் 430சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த காட்டுப்பகுதி 1974ஆம் ஆண்டில்
தேசியப் பூங்காவாக மாற்றப்பட்டது. 1985ஆம் ஆண்டில் இதனை உலக பண்பாட்டுச்
சின்னமாக யுனெஸ்கோ அங்கீகாரம் செய்தது. 2005ஆம் ஆண்டில் நடந்த காசிரங்கா
தேசியப்பூங்காவின் நூற்றாண்டு விழாவில் கர்சன் பிரபுவின் குடும்பத்தினர்
அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
இத்தனை சிறப்புமிக்க காசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ள அரியவகை உயிரினங்களைக் காண  உலகம்
முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.காசிரங்கா தேசியப்
பூங்காவுக்குள் அங்குள்ள வாகனங்களில் சென்று ரசிக்கலாம். யானை சவாரியும்
உண்டு. வனத்திற்குள் சுற்றுலாப் பயணிகள் நடந்துசெல்ல அனுமதி இல்லை. நவம்பர்
மாதத்தின் மத்தியில் இருந்து ஏப்ரல் மாதத்தின் தொடக்கம் வரை
காசிரங்காவிற்கு சுற்றுலா செல்வதற்கு ஏற்ற காலமாக கருதப்படுகிறது.
எப்படிப் போகலாம்?
காசிரங்கா
தேசியப் பூங்காவிற்கு சாலை வசதி உள்ளது.220கி.மீ தொலைவில் கவுகாத்தியிலும்
90கி.மீ தொலைவில் ஜோர்ஹட்டிலும் விமான நிலையங்கள் உள்ளன.இந்த இரு நகரங்கள்
மற்றும் ஃபர்கெட்டிங் ஆகிய இடங்களில் ரயில்நிலையம் உள்ளது.அங்கிருந்து
சாலை மார்க்கமாக தேசியப்பூங்காவிற்கு சென்று விடலாம்.
|
--------------------------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism |
 |
29.12.10 ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தர் |
ராஜஸ்தான்
மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரின் இன்னொரு ஆச்சரியம் 'ஜந்தர்மந்தர்'
என்னும் பாரம்பரிய வானியல் கோளரங்கம். ஜெய்ப்பூர் அரண்மனையையொட்டி
அமைந்துள்ளது.
இது
கி.பி1727-1734ஆம் ஆண்டுகளுக்கு இடையே இரண்டாம் ஜெய்சிங் மகாராஜா என்ற
மன்னரால் அமைக்கப்பட்டது.வானவியல் கருவிகள் இங்குள்ளன.ஜந்தர் மந்தரின்
உண்மையான பெயர் 'யந்த்ரா மந்த்ரா'. இதில் 'யந்த்ரா' என்றால் கருவிகள்.
'மந்ந்ரா' என்றால் சூத்திரம். அதாவது கருவிகளின் துணையுடன் வானவியல்
கணக்கீடுகளை அறிந்து கொள்ளுதல் என்பது இதன் பொருளாகும். இதே போல
ஜந்தர்மந்தர்கள் டெல்லி, காசி, உஜ்ஜைனி, மதுரா போன்ற இடங்களில் இருந்தாலும்
ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தரே மிகப்பெரியது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களும் கருவிகளும்
நேரத்தை அறிந்து கொள்ளவும்,கிரகணங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும்,
கோள்களின் சாய்மானங்களை அறியவும் என வானவியல் தொடர்பான கணக்கீடுகளுக்கு
பயன்பட்டு வந்துள்ளன.இங்குள்ள 'சாம்ராட் இயந்திரம்'என்றழைக்கப்படும்
சூரியக் கடிகாரம் நேரத்தை மிகத் துல்லியமாக அறிவதற்கு பயன்பட்டுள்ளது. இதன்
உயரம் 90அடி. இது உலகின் மிகப்பெரிய சூரியக்கடிகாரமாக கருதப்படுகிறது.
இதன் நிழலை அடிப்படையாகக் கொண்டு நேரத்தை கணக்கிட்டு வந்துள்ளனர்.
இங்குள்ள வானியல் கணக்கீட்டுக் கருவிகளை
பளிங்குக் கற்களால் கட்டியிருப்பது இன்னொரு சிறப்பு.உள்ளுர் உழவர்கள்
பருவநிலையை தெரிந்து கொள்ள இன்றளவும் இந்தச் சூரியக்கடிகாரம் உதவி
வருகிறது. சிறப்புக்குரிய ஜந்தர்மந்தர் 1948ஆம் ஆண்டு தேசிய நினைவுச்
சின்னமாக அறிவிக்கப்பட்டது.யுனெஸ்கோவின் உலக பண்பாட்டுச் சின்னங்களின்
பட்டியலில் 2010ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரின் வரலாற்றில் பல சுவாரஸ்யங்கள்
உண்டு. கி.பி.1875ஆம் ஆண்டில் விக்டோரியா மகாராணியின் மகன் இந்த நகருக்கு
வருகைதந்ததையொட்டி நகரின் முக்கிய வீதிகளில் சிவப்பு வண்ணங்களைப் பூசி
அழகுபடுத்தினார் ஜெய்ப்பூர் மகாராஜா சவாய் ராம்சிங். அன்று முதல்
ஜெய்ப்பூர் 'பிங்க் சிட்டி' என்றழைக்கப்படுகிறது. ஜெய்ப்பூர் அரண்மனையின்
அழகில் மயங்கா  தவர்களே
இருக்க முடியாது. அந்த வகையில் ஜெய்ப்பூரின் ஆச்சரியம் மற்றும்
அதிசயங்களில் ஒன்றாக ஜந்தர்மந்திர் என்றழைக்கப்படும் வானியல் கோளரங்கமும்
திகழ்ந்து வருகிறது.
எப்படிப் போகலாம்?
இந்தியாவின்
முக்கிய நகரங்களில் இருந்து ஜெய்ப்பூருக்கு நல்ல சாலை வசதிகள் உள்ளன.
ஜெய்ப்பூரில் பெரிய ரயில்நிலையம் உள்ளது. டெல்லி, மும்பை போன்ற நகரங்களில்
இருந்து ஜெய்ப்பூருக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஜெய்ப்பூர் நகரில்
இருந்து சுமார் 13கி.மீ தொலைவிலேயே விமான நிலையம் உள்ளது.
|
--------------------------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism |
 |
12.02.10 காதல் சின்னம் தாஜ்மஹால் |
உலகளவில்
பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ,அவற்றை உலக பண்பாட்டுச்
சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவின் 27 இடங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 23 இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள
பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்
கொண்டிருக்கிறோம். இந்த வாரம்...
காதல் சின்னம் தாஜ்மஹால்
உலக அதிசயம், காதல் சின்னம், பரவசப்படுத்தும்
பளிங்கு மாளிகை என தாஜ்மஹாலின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அழகுப் பெட்டகமாக ஜொலித்துக் கொண்டிருக்கும்
தாஜ்மஹால்,  இந்தியாவின் முக்கிய அடையாளச் சின்னங்களில் ஒன்று. மொகலாய
மன்னர் ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக இதைக் கட்டி
முடித்தார். ஷாஜஹானின் மூன்றாவது மனைவி மும்தாஜ். இவர் மீது ஷாஜஹானுக்கு
தனிக்காதல் உண்டு. தனது பதினான்காவது பிள்ளைப்பேற்றின் போது மும்தாஜ்
இறந்து விட்டார். மும்தாஜின் பிரிவைத் தாங்க முடியாத ஷாஜஹான் அவரது நினைவாக
எழுப்பியதே தாஜ்மஹால். இங்கு மும்தாஜின் சமாதி உள்ளது. பின்னாளில் ஷாஜகான்
இறந்த பிறகு அவரது உடலும் இங்கு அடக்கம் செய்யப்பட்டது. வரலாற்றுச்
சிறப்புக்குரிய தாஜ்மஹால் கட்டப்பட்ட காலம் கி.பி. 1631-1654ம் ஆண்டு.
சுமார் 22ஆயிரம் பேர் கட்டடப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முழுவதும்
பளிங்குக் கற்களைப் பயன்படுத்தி பாரசீக பாணி மற்றும் மொகலாயருக்கே உரித்தான
ஸ்டைலும் கலந்து உருவாக்கப்பட்டது. இங்குள்ள ஒவ்வொரு பகுதியும் மீண்டும்
மீண்டும் ரசிக்கத் தூண்டுபவை.
தாஜ்மஹால்- மிக நேர்த்தியான வடிவமைப்பு கொண்டது. சதுரவடிவ நிலப்பரப்பில் சமச்சீராக கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மூலைக்கு  ஒன்றாக
நான்கு உயரமான மினார்களும், கட்டடத்தின் உச்சியில் வெங்காய வடிவில்
அமைக்கப்பட்டிருக்கும் குவிமாடமும் தாஜ்மஹாலின் தனி அடையாளங்கள். குவிமாடம்
மட்டும் 35மீட்டர் உயரம் கொண்டது. சுவர்கள் அனைத்திலும் பளிங்கு கற்கள்
பதிக்கப்பட்டுள்ளன. 'துலுத்' என்ற வகையிலான அரபி வனப்பெழுத்துக்கள்
எழுதப்பட்டுள்ளன. பாரசீக வனப்பெழுத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் இவை
உருவானவை. மேலும் செடி, கொடி வடிவங்களும் அழகுற வரையப்பட்டுள்ளன.
தாஜ்மஹாலின் உட்புறக்கூடம் இன்னும் அழகானது. எண்கோண வடிவில் அமைந்துள்ள
உட்புறக்கூடத்தில் விலை உயர்ந்த பளிங்கு கற்கள்
பதிக்கப்பட்டுள்ளன.தாஜ்மஹாலைப் போலவே அதன் முன்புறம் அமைந்துள்ள பூங்காவும்
ரசனைக்குரியது. பாரசீக பூங்காக்களின் வடிவமைப்பை பின்பற்றி இது
அமைக்கப்பட்டுள்ளது.
எப்படிப் போகலாம்?
ஆக்ராவில் விமான நிலையம் உள்ளது. டெல்லியில் இருந்து
ஆக்ராவுக்கு உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன ஆக்ராவும் ரயில்
நிலையமும் உள்ளது. டெல்லியில் இருந்து சுமார் 3மணி நேர ரயில் பயணத்தில்
ஆக்ராவை அடைந்து விடலாம். நல்ல சாலை வசதிகளும் உள்ளன.
"கலையும், காதல் வரலாறும் கலந்த ஒரு அழகு ஓவியம்தான் தாஜ்மஹால். நேரில் பார்க்கும்போதே இதை உணர முடியும்"
----------------------------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism |
 |
12.08.09 கொனார்க் சூரியக்கோவில் |
உலகளவில்
பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச்
சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச்
சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்தவாரம்....
கொனார்க் சூரியக்கோவில்
"இங்கே,
கல்லின்மொழி மனிதனின் மொழியை தாண்டிச்செல்கிறது" என்று வியந்து
கூறியிருக்கிறார், மகாகவி ரவீந்திரநாத் தாகூர். இப்படி அவரை வியக்க
வைத்தவை, கொனார்க் சூரியபகவான் கோவில் சிற்பங்கள்.
"இருபத்து நான்கு பெரிய சக்கரங்கள் கொண்ட பிரம்மாண்டத் தேர், முன்கால்களைத்
தூக்கியவாறு ஆக்ரோஷமாக அதை இழுத்துச் செல்லும் ஏழு குதிரைகள்..." எனச்
சொல்லிப்பாருங்கள். மிரட்டலாக இருக்கும். அதுவே நிஜமாக இருந்தால்...?
இருக்கிறது. கொனார்க் சூரியகோவிலாக!. ஆம். கல்லில் செதுக்கப்பட்ட
பிரம்மாண்ட தேர்வடிவம்தான் சூரியபகவான் கோவில்.
ஒரிசா
மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில் சூரியபகவானுக்காக
கட்டப்பட்ட கோவில் இது. சிவப்பு மண்பாறை, கறுப்புக் கிரானைட் கற்களால்
உருவாக்கப்பட்ட இந்த கலைப்பொக்கிஷத்துக்கு ஐரோப்பிய மாலுமிகள் சூட்டிய
பெயர் 'பிளாக் பகோடா' (கறுப்பு கோவில்). பதின்மூன்றாம் நூற்றாண்டில்
(கி.பி1236- 1264) கங்கப் பேரரசன் நரசிம்மதேவரால் கட்டப்பட்டது.
இதைக்கட்டுவதற்கு பேரரசின் 12ஆண்டு வருமானம் செலவிடப்பட்டதாம்.
இந்து
சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள்.
அதன்பேரிலேயே சூரியபகவானுக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டதாகக்
கூறப்படுகிறது. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய
வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள்,
சிங்கங்கள் சிற்பங்களாய் சிலிர்த்துக் கொண்டிருக்கின்றன.
பாலியல்
விளையாட்டுக்களை பளிச்செனக் காட்டும் சிற்பங்களும் உண்டு. சௌரவ மதத்தில்
சூரியபகவான் சிருஷ்டிதேவனாகப் பார்க்கப்படுகிறார். அந்த அடிப்படையே பாலியல்
சிற்பங்கள் உருவாகக்காரணம். கோவிலின் முன்பகுதியில் உள்ள நாதமந்திர்
மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. இப்படி நூற்றுக்கணக்கான சிற்பங்கள், கல்லில்
நடப்பட்ட கலைநாற்றுக்களாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன.
நரசிம்ம
தேவரால் கட்டப்பட்ட முழுக்கோவிலும் இப்போது இல்லை. கோவிலின் சில பகுதிகள்
இடிந்து விட்டாலும் மிடுக்குக் குறையவில்லை. சூரியக்கோவிலில் உடைந்து
விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கியப்பொருட்களை கொனார்க்
அருங்காட்சியத்தில் காணலாம்.
இந்தியாவில்
சூரியபகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க்
சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு
'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது. கோவிலை
சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
விழாக்கள்:
கொனார்க்கில் பிப்ரவரி மாதம் நடைபெறும்
'மஹாசப்தமி விழா' பிரசித்தம். சூரியபகவானை தரிசிக்க லட்சக்கணக்கானோர்
கூடுகின்றனர். டிசம்பர் மாதத்தில் சூரியக்கோவில் முன் நடனத்திருவிழா
ஒன்றும் நடத்தப்படுகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த வண்ணத்
திருவிழா இது.
எப்படிப் போகலாம்?
புவனேஸ்வரில்
இருந்து 65 கி.மீ தொலைவிலும் பூரியில் இருந்து 35 கி.மீ தொலைவிலும்
கொனார்க் அமைந்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து சாலைமார்க்கமாக சென்று
விடலாம். பூரி, புவனேஸ்வரில் ரயில்நிலையங்கள் உள்ளன. புவனேஸ்வரில் விமான
நிலையம் இருக்கிறது. கொனார்க் அருகில் அழகு சிந்தும் சந்திபாகா கடற்கரை
உள்ளது. இதுவும் அருமையான ஒரு சுற்றுலாத்தலமாகும்.
|
|
---------------------------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism |
 |
22.07.09 டெல்லி செங்கோட்டை |
உலகளவில்
பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச்
சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச்
சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்தவாரம்....
டெல்லி செங்கோட்டை
டெல்லி
நகரின் இன்னொரு கம்பீரம் 'செங்கோட்டை'. இந்திய சுதந்திரதினத்தன்று பிரதமர்
தேசியக்கொடியேற்றி உரையாற்றும் பிரம்மாண்ட இடம். இதை உருவாக்கியவர் மொகலாய
மன்னர் ஷாஜஹான்.
தனது
தலைநகரத்தை ஆக்ராவில் இருந்து ஷாஜஹானா பாத்திற்கு (தற்போதைய பழைய டெல்லி)
ஷாஜஹான் மாற்றியபோது செங்கோட்டை உருவானது. இதனைக் கட்டிமுடிக்க 1638-48 வரை
பத்தாண்டு ஆனது. செலவிட்ட தொகை அப்போதைய மதிப்புக்கு ஒருகோடி ரூபாயாம்.
யமுனை
நதிக்கரையில் ஒப்பிலா அழகுடன் எழுந்து நிற்கும் செங்கோட்டை, பாரசீக,
ஐரோப்பிய, இந்திய கட்டடக் கலைகளை குழைத்து எழுப்பப்பட்டது. கண்களை மயக்கும்
கலைநயம், சவால்விடும் கட்டுமானம், ஆச்சரியப்படுத்தும் தோட்டக்கலை போன்றவை
இன்றளவும் போற்றப்படுகிறது. டெல்லிகேட், லாகூர்கேட் என இருபெரும்
நுழைவாயில்கள் உள்ளன.
கோட்டைக்குள்
இருக்கும் அரசவை மண்டபங்களில் மட்டுமின்றி அந்தப்புரங்களிலும்கூட கலைநயம்
கண்சிமிட்டுகிறது. 'திவான்- இ- ஆம்' எனப்படும் தர்பார் மண்டபம்
பொதுமக்களும் பிரதிநிதிகளும் அமரும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கே மன்னருக்காக அமைக்கப்பட்டிருக்கும் உப்பரிகையும் கம்பீரமானது.
'ஜெனானா'
என்றழைக்கப்படும் அந்தப்புரம், மும்தாஜ் மஹால், ரங் மஹால் போன்றவையும்
குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள சலவைக்கல் பதிக்கப்பட்ட நீருற்று புதுமையின்
பதிப்பு.அவுரங்கசீப்பின் வழிபாட்டுக்காக கட்டப்பட்ட மோத்திமஸ்ஜித்
எனப்படும் பியர்ல் மஸ்ஜித் (முத்து மசூதி) முழுவதும் சலவைக்கல் மயமே.

இவைதவிர
அரச குடியிருப்புகள் அமைந்திருந்த 'நஹ்ர்-இ-பேஹிஸ்ட்' என்ற பகுதி அசத்தல்
ரகம். வீடுகளுக்கு உள்ளேயே யமுனை ஆற்றின் நீர் ஓடும் வகையில் கால்வாய்கள்
அமைக்கப்பட்டுள்ளன. இப்படி, கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும்கூட
கால்வாய்வெட்டி நனவாக்கிய மொகலாய மன்னர்கள். இதை 'சொர்க்கத்தின் நீரோடை'
என்றும் அழைத்து வந்தனர். நீரோடையை இன்றும் காணலாம்.
செங்கோட்டையைக் கட்டியவர் ஷாஜஹான் என்றாலும் அவருக்குப் பின்னர் அவுரங்கசீப் உள்ளிட்ட மன்னர்களும் சில மாற்றங்களை செய்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது கண்டோன்மென்ட்டாக (ராணுவமுகாம் மற்றும்
குடியிருப்பு பகுதி) செங்கோட்டை பயன்படுத்தப்பட்டது. அப்போது சில
கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய விடுதலைக்குப்பிறகும்
ராணுவக்-கட்டுப்பாட்டில் இருந்துவந்த செங்கோட்டை, 2003ம் ஆண்டில் இந்திய
சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இங்குள்ள
மும்தாஜ் மஹாலில் மொகலாய மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே வரலாற்றுப் பொக்கிஷங்கள். பெருமைக்குரிய
டெல்லி செங்கோட்டை, யுனெஸ்கோவால் 2007ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக
அறிவிக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism |
 |
09.07.09 அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார் |
உலகளவில்
பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச்
சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச்
சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்தவாரம்....
அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்
டெல்லி
குதுப்மினார். இந்தியாவின் மிகஉயர்ந்த கோபுரம். செம்மண்-பாறைக் கற்களால்
உருவான அரிய பொக்கிஷம். இதன் உயரம் 72.5 மீட்டர் (சுமார் 238அடி). உயர்ந்து
நிற்கும் குதுப்மினார், சுவாரஸ்ய வரலாற்றையும் உள்ளடக்கியது.
டெல்லி
மட்டுமின்றி தெற்காசியாவின் முதல் முஸ்லிம் ஆட்சியாளர், முதல் சுல்தான்
என்ற பெருமைக்குரியவர் குத்புதீன் ஐபக். அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர்.
மத்திய ஆசியாவில் துருக்கிய மரபில் பிறந்த
குத்புதீன் ஐபக் சிறுவயதிலேயே அடிமையாக விற்கப்பட்டார். இடையே கைமாறி,
கடைசியில் முகமத்கோரியால் விலைக்கு வாங்கப்பட்டார். தனது வீரதீர
செயல்பாடுகளால் கோரியின் முக்கிய தளபதியாக விளங்கினார். கோரியின்
மறைவுக்குப் பிறகு டெல்லி சுல்தான் ஆனார்.டெல்லியில் உருவான முஸ்லிம்
நினைவுச்-சின்னங்களுக்கு காரணகர்த்தா இவரே.
முதலில்
குவ்வாத்-உல்-இஸ்லாம் மசூதியை அமைத்த குத்புதீன் ஐபக், 1199ம் ஆண்டில்
குதுப்மினாருக்கு அஸ்திவாரம் போட்டார். மக்களை தொழுகைக்கு அழைப்பதற்கு
வசதியாக இந்த கோபுரத்தை எழுப்பத் தொடங்கினார். இதன் முதல் அடுக்கு
முற்றுப்பெற்ற நிலையில் குத்புதீன் ஐபக் திடீரென மரணம் அடைந்தார். பிறகு
ஆட்சிக்கு வந்த குத்புதீன் ஐபக்கின் மருமகன் சம்சுதீன் அல்துமிஷ்,
கோபுரத்தில் மேலும் மூன்று அடுக்குகளை அமைத்தார். 1211 முதல் 1236ம் ஆண்டு
வரை கட்டடப்பணிகள் நடந்தன.
இருப்பினும்,
கடைசி அடுக்கு 1386ம் ஆண்டில் பெரோஷா துக்ளக் என்பவரால் கட்டி
முடிக்கப்பட்டது. இப்படி மூன்று மன்னர்களால் உயர்த்தப்பட்டதுதான்
குதுப்மினார். ஒவ்வொரு அடுக்கிலும் உப்பரிகை அமைந்திருப்பது இதன்
தனிச்சிறப்பு. குதுப்மினாரின் உச்சிக்கு சென்றடைய 379 படிகள்
அமைக்கப்பட்டுள்ளன.
குதுப்மினார்
வளாகத்தில் உள்ள அல்துமிஷ் ஸ்தூபி, அலைய் தர்வாஷா மெயின்கேட், அலைய்
மினார் போன்ற கட்டடங்களும் கலைநயம் மிக்கவை. ஏழு மீட்டர் உயரம் கொண்ட
இரும்புத்தூண் ஒன்றும் இங்கு உள்ளது. நான்கரை அடி பருமனும் ஏழரை டன் எடையும் கொண்ட இந்த இரும்புத்தூண் இன்றளவும் சிறிதும்கூட துருப்பிடிக்காதது அதிசயமே.
குதுப்மினாரையும்
அதைச் சுற்றியுள்ள கட்டடங்களையும் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ
அமைப்பு 1993ம் ஆண்டில் அறிவித்தது. நவம்பர்- டிசம்பரில் இங்கு குதுப்
திருவிழா நடத்தப்படுகிறது. டெல்லி மாநில சுற்றுலாத்துறை சார்பில் 3நாட்கள்
நடைபெறும் இந்த விழா, இசை - நடனம் - நாட்டியம் என அமர்க்களப்படுகிறது.
அடிமை உருவாக்கிய அற்புத கோபுரம் குதுப்மினார்,தன்னைக் காண்போரையும் அடிமையாக்கி விடுகிறது, வனப்பாலும் வசீகரத்தாலும்..
|
-----------------------------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism |
 |
26.06.09 ஆனந்த ரயில்கள் |
உலகளவில்
பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச்
சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச்
சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்தவாரம்....
ஆனந்த ரயில்கள்
ரயில்
பயணம் ஆனந்தமே. பாரம்பரியமிக்க ரயில்களில் பயணம் செய்வது பேரானந்தம்.
பெருமையும் கூட. இந்தியாவில் அப்படி பெருமைக்குரியவை டார்லிஜிங் இமாலயன்
ரயில், நீலகிரி மலைரயில் மற்றும் கல்கா- சிம்லா ரயில்கள். காரணம், இவை
மூன்றும் யுனெஸ்கோ அமைப்பால் உலக பண்பாட்டுச் சின்னங்களாக
அறிவிக்கப்பட்டவை.
* டார்லிஜிங் இமாலயன் ரயில்:
மேற்குவங்க
மாநிலம் சிலிகுரி- டார்ஜிலிங் மலைப்பாதையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
இது அழகாக, பொம்மைபோல் இருப்பதால் இருப்பதால் டாய் டிரெய்ன் என்றும்
அழைக்கிறார்கள். இமயமலை அடிவாரத்தில் உள்ள
சிலிகுரியில் புறப்பட்டு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,200 மீட்டர்
உயரத்தில் உள்ள டார்ஜிலிங்கை அடைகிறது. பயணதூரம் 86 கி.மீ.
குட்டி
குட்டி பெட்டிகளை பழைமை வாய்ந்த நீராவி என்ஜின் இழுத்துச் செல்வதைப்
பார்க்கும்போதே பரவசம் தொற்றிக்கொள்ளும். இந்த ரயில்பாதை1879 - 1881ம்
ஆண்டுகளில் அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியதாம். இது முதலில்
சரக்குபோக்குவரத்துக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின்
போது சிப்பாய்களையும் ஆயுங்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது.
அதன்பிறகே பயணிகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
சிறப்புக்குரிய
டார்ஜிலிங் இமாலயன் ரயில் 1999-ம் ஆண்டில் யுனெஸ்கோவால் இந்தியாவின் உலக
பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் பண்பாட்டுச்
சின்னமாக அறிவிக்கப்பட்ட 2வது ரயில் ஆகும். (முதல் ரயில் ஆஸ்திரியாவின்
ஸெம்மரிங் ரயில்).
* நீலகிரி மலைரயில்:
தமிழகத்தில் கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் நீலகிரி மலைரயில் இயக்கப்படுகிறது. 1845ம் ஆண்டில்
ரயில்பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1899ம் ஆண்டில் போக்குவரத்து
தொடங்கியது. மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை
என்பதால் தண்டவாளத்தின் நடுவே பல்சக்கரம் அமைத்துள்ளனர். பல்சக்கரங்களை
பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது.
மேட்டுப்பாளையம்
- குன்னூர் வரை நீராவி என்ஜினும் பின்னர் டீசல் என்ஜினும்
பயன்படுத்தப்படுகிறது. பயணதூரம் 46கி.மீ.தான் என்றாலும் பயணநேரம் சுமார்
ஐந்தரைமணி நேரமாகும். வழியில் 208 வளைவுகள், 16குகைகள், 250 பாலங்கள்
உள்ளன. எங்கு திரும்பினும் பசுமை, நீரோடை, காட்டு மிருகங்கள் என இயற்கைமயம்
மனதைத் தாலாட்டும்.
நீலகிரி மலைரயில் 2005ம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
* கல்கா- சிம்லா ரயில்:
இமயமலை அடிவாரத்தில் உள்ள குளுகுளு ஜிலுஜிலு நகரம் சிம்லா. இமாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகர். கல்கா நகரத்தில் இருந்து சிம்லாவுக்கு
ரயில்பாதை அமைக்கப்பட்டதன் பின்னணி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவை
ஆண்டுவந்த ஆங்கிலேயருக்கு சிம்லாமீது ஒரு மோகம் உண்டு. காரணம், அங்கு
நிலவும் குளுகுளு சீதோஷ்ண நிலை.
அதனால் பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைக்கால தலைநகராக சிம்லாவை மாற்றிக்கொண்டனர்.
ராணுவத்தின் தலைமை அலுவலகத்தையும் சிம்லாவில் அமைத்தனர். இதற்காக
போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுதான்
கல்கா- சிம்லா ரயில்பாதை அமைக்கப்பட்டது. 1903ம்
ஆண்டு முதல் ரயில்போக்குவரத்து தொடங்கியது. கடல் மட்டத்தில் இருந்து
சுமார் 2,076 மீட்டர் உயரத்தில் உள்ள சிம்லாவுக்கு ரயிலில் செல்வது சுகமான
சூப்பரான அனுபவம்.
கல்கா - சிம்லா ரயில் 2008ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
ஆனந்த ரயில்களில் உங்களது ஆனந்தப் பயணம் எப்போது?
------------------------------------------------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism |
 |
18.06.09 புத்தகயா மஹாபோதி ஆலயம் |
உலகளவில்
பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச்
சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச்
சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்தவாரம்....
புத்தகயா மஹாபோதி ஆலயம்
ஆசையே
அழிவுக்கு காரணம் என்ற தத்துவத்தை உலகுக்கு போதித்தவர் புத்தர். அஹிம்சையை
வலியுறுத்தியவர். அவர் ஞானம் பெற்ற இடமே புத்தகயா. புத்தர் இங்கு ஆறு
ஆண்டுகள் தங்கி தவமிருந்திருக்கிறார். அவர் ஞானம் பெற்ற மரம் அமைந்துள்ள
பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆலயம் மஹாபோதி ஆலயம் என்றழைக்கப்படுகிறது. இங்கு
அமர்ந்தவாக்கில் அமைதியின் உருவமாக ஆழ்ந்த தியான நிலையில் புத்தர்
காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
மஹாபோதி
ஆலயத்தின் 55மீட்டர் உயர பிரம்மாண்ட கோபுரமும் அதைச் சுற்றியுள்ள நான்கு
சிறிய கோபுரங்களும் இன்றளவும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
காரணம், அனைத்தும் சுட்ட செங்கற்களால்
கட்டப்பட்டவை. கோபுரம் கட்டப்பட்ட காலம் 3-6ம் நூற்றாண்டுகளுக்கு
இடைப்பட்ட காலம் என கருதப்படுகிறது. சிறப்புக்குரிய மஹாபோதி ஆலயத்தைக்
கட்டியவர் அசோக மன்னர். புத்தர் ஞானம் பெற்று சுமார் 250ஆண்டுகளுக்கு பிறகு
இதை கட்டியிருக்கிறார். புத்தர் தியானத்தில் அமர்ந்த இடத்தில் ஒரு மேடை
அமைக்கப்பட்டு இரண்டு பெரிய பாதச்சுவடுகள் வைக்கப்பட்டுள்ளன.
புத்தர்
பிறந்த இடமான கபிலவஸ்து, ஞானம் பெற்ற புத்தகயா, அவர் முதல்முறையாக போதனை
செய்த சாரநாத், முக்தி அடைந்த குஷி ஆகிய இடங்கள் புத்தமதத்தினருக்கு
புனிதமான இடங்கள். இவற்றில் புத்தகயா புத்தர் ஞானம் பெற்ற இடம் என்பதால்
சிறப்புகுரியதாகிறது. 
உலகம்
முழுவதிலும் இருந்தும் புத்தமதத்தினர் இங்கு வந்து செல்கிறார்கள்.
புத்தகயாவில் உள்ள மஹாபோதி கோவில் பீகார் மாநில அரசின் கட்டுப்பாட்டில்
உள்ளது யுனெஸ்கோ சார்பில் உலக பண்பாட்டுச் சின்னமாக 2002ல்
அறிவிக்கப்பட்டது.
எப்படிச் செல்லலாம்?
சிறப்புக்குரிய
புத்தகயா, பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து சுமார் 95கி.மீ தொலைவில்
அமைந்துள்ளது. இங்கு செல்ல பீகாரின் முக்கிய நகரங்களில் இருந்து சாலை வசதி
இருக்கிறது. புத்தகயாவில் ரயில் நிலையம் உள்ளது. பாட்னாவில் விமானநிலையம்
உள்ளது.
|
----------------------------------------------------------------------------------------------------
|
|
|
No comments:
Post a Comment