Tourism3

Dotcom Spl >> tourism
19.03.09      முதல் ரயில்... முதல் ஸ்டேஷன்..!
 
த்ரபதி சிவாஜி டெர்மினஸ்!. முன்பு விக்டோரியா டெர்மினஸ். சுருக்கமாக மும்பை சி.எஸ்.டி (CST) அல்லது மும்பை VT. இப்படி குறிப்பிடப்படும் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம் வரலாற்று சிறப்பு மிக்கது. 
இந்தியாவின் ரயில்போக்கு-வரத்துக்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர் என்பது தெரிந்ததுதான். இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் மூன்று நீராவி என்ஜின்களுடன் மும்பை-  தாணே இடையே 1853ம் ஆண்டில் இயக்கப்பட்டது. முப்பத்துநான்கு கி.மீ பயணதூரத்தை 57நிமிடங்களில் கடந்தது முதல் ரயில். நாட்டின் ரயில்பயணம் தொடங்கிய இடமே தற்போதைய சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்.

மும்பை கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது, போரி பந்தர்.  ஆங்கிலேயர், ஏற்றுமதி இறக்குமதி பொருட்களை பாதுகாத்து வைப்பதற்காக இந்த இடத்தை தேர்ந்தெடுத்தனர். இதற்காக ரயில் போக்குவரத்து அவசியம் என்பதை உணர்ந்தனர். கிரேட் இன்டியன் பெனின்சுலார் ரயில்வே என்ற அமைப்பினை ஏற்படுத்தி 1850ம் ஆண்டில் இங்கு ரயில்நிலையம் அமைத்தனர். அது போரி பந்தர் டெர்மினஸ் என அழைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேவைகருதி ரயில்நிலைய கட்டடத்தை பிரம்மாண்டமாக கட்ட ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.
கட்டடத்தை வடிவமைக்க அப்போது பிரபல நிபுணராக இருந்த பிரெடரிக் வில்லியம் ஸ்டீவன்ஸ் என்பவர் பணிக்கப்பட்டார். அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 16.14 லட்சம்!. புதிய கட்டட மாடல் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஸ்டீவன்ஸ் சுமார் 10மாதங்கள் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாராம்.

அதில் மத்திய லண்டனின் செயின்ட் பாங்கிராஸ் ரயில் நிலையக் கட்டட வடிவமைப்பு பிடித்துப் போக அதுபோலவே மும்பை ரயில்நிலையத்தையும் அமைக்க முடிவு செய்துள்ளார். கட்டடப் பணிகள் தொடங்கின. இந்திய, இத்தாலிய, கோதிக் கட்டடக்கலைகளின் கலவையாக, ஆங்கிலேய நிபுணர்களும் இந்தியக் கைவினைஞர்களும் இணைந்து தீட்டிய அழகு ஓவியமாக உருவாக்கப்பட்டது மும்பை ரயில்நிலையம்.
மரவேலைப்பாடு, டைல்ஸ் பதிப்பு, அலங்கார இரும்பு வேலைப்பாடு என அனைத்திலும் கலைநயம் மிளிர அமைத்தனர். உள் அலங்கார வேலைப்பாடுகளில் பாம்பே ஸ்கூல் ஆப் ஆர்ட் (சர் ஜே.ஜே.ஸ்கூல் ஆப் ஆர்ட்) மாணவர்களும் கைவண்ணம் காட்டியிருக்கிறார்கள். இப்படி பிரம்மாண்டமாக உருவான ரயில்நிலையம் 1888ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இங்கிலாந்து ராணியை பெருமைப்படுத்தும் வகையில் விக்டோரியா டெர்மினஸ் என பெயர் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கிரேட் இன்டியன் பெனின்சுலார் ரயில்வேயின் தலைமையகமாக விக்டோரியா டெர்மினஸ் திகழ்ந்து வந்துள்ளது. ரயில் டிக்கெட்டு-களையும் இங்கேயே அச்சடித்து வந்துள்ளனர்.
இப்படி சிறப்புமிக்க ரயில்-நிலையத்துக்கு 1996ம் ஆண்டில் மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜி நினைவாக சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை உலக பண்பாட்டுச் சின்னமாக 2004ல் யுனெஸ்கோ அறிவித்தது. மத்திய ரயில்வேயின் தலைமையக-மாகவும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நிர்வாக கட்டடம் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட பெருமையும் இதற்கு கிடைத்துள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------- 
Dotcom Spl >> tourism
12.03.09      வரலாறு தந்த பொக்கிஷம் சாம்பானர்- பாவாகத்

சாம்பானர்- பாவாகத் ஆர்க்கியாலஜிக்கல் பார்க்! அழகு தமிழில் சொன்னால் சாம்பானர்- பாவாகத் தொல்லியல் பூங்கா!. குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் தகதகத்துக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பொக்கிஷம். சுமார் 800மீட்டர் உயரம் கொண்ட பாவாகத் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியே சாம்பானர்- பாவாகத் என்றழைக்கப்-படுகிறது. மலை உச்சியில் உள்ள காளிக்கமாதா கோவில் மிகவும் பிரசித்தம். அடிவாரத்தில் உள்ள அரண்மனை கட்டிடங்கள், மசூதிகள் போன்றவை 8 - 14ம் நூற்றாண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டதாகும்.
 சோலங்கி மன்னர்கள், பிறகு கிக்சி சவுகான்கள் வசம் இருந்து வந்த இந்தப்பகுதியை குஜராத் இளம்சுல்தானாக விளங்கிய மஹமூத் பகாடா 1484ம் ஆண்டு கைப்பற்றியுள்ளார். சாம்பானார் பகுதியை புனரமைத்து நூற்றுக்கணக்கான புதிய கட்டங்களை எழுப்பியுள்ளார். இதற்கு அவர் செலவிட்டது 23ஆண்டுகள். மேலும் இந்தப்பகுதிக்கு முகம்மதாபாத் எனப் பெயரிட்டு அவுரங்காபாத்தில் இருந்து தலைநகரத்தை சாம்பனாருக்கு மாற்றியிருக்-கிறார். இப்படி அழகு பார்த்து அமைத்த சாம்பனார் பகுதி, 1535ம் ஆண்டில் மொகலாய மன்னர் ஹுமாயூன் வசம் சென்றிருக்கிறது.

 இப்படியாக, பல வரலாற்றுப்-பக்கங்களை வசப்படுத்தி-யிருக்கும் சாம்பனார்- பாவாகத்தில் தற்போது எஞ்சி நிற்பது காளிக்கமாதா கோவில், ஐந்து மசூதிகள், மற்றும் சில கட்டடங்கள் மட்டுமே. இந்து, முஸ்லிம் கட்டடக் கலாச்சாரத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வரும் சாம்பனார்- பாவாகத் ஆர்க்கியாலஜிக்கல் பார்க், 2004ம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பண்பாட்டுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்தது.
எப்படிப் போகலாம்?
குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் இது அமைந்திருப்பதால் நல்ல சாலை வசதியைக் கொண்டுள்ளது. ரயிலில் செல்பவர்கள் கோத்ரா ரயில்நிலையத்தில் இறங்கி அங்கிருந்து போகலாம். வடோதராவில் விமானநிலையம் அமைந்திருக்கிறது. பாவாகத் மலைக்கோவிலுக்கு ரோப்கார் வசதி உள்ளது. அதில் பயணிப்பது புதுமை அனுபவம். 
---------------------------------------------------------------------------------------------------------------
Dotcom Spl >> tourism
 
05.03.09      பக்தி, காதலுக்கு சாட்சி சாஞ்சி

உலகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ நிறுவனம் அவற்றை பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்-றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
பக்தி, காதலுக்கு சாட்சி சாஞ்சி
 
 புத்தம் சரணம் கச்சாமி... என்று பல நாடுகளில் பரவிக்கிடக்கும் புத்தமதத்துக்கு பூர்வீகம் இந்தியாதான். இதற்குச் சான்றாக நாடெங்கிலும் பழங்கால சின்னங்கள், கல்வெட்டுக்கள், ஓவியங்கள் நிறைய உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை சாஞ்சி ஸ்தூபி மற்றும் அதைச்சுற்றியுள்ள கலையம்சம் மிக்க கட்டிடங்கள். மத்தியப்பிரதேச மாநிலம் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள சாஞ்சி கிராமத்தில் இந்த ஸ்தூபி உள்ளது. கிராமத்தின் பெயராலேயே ஸ்தூபியும் அழைக்கப்பட்டு வருகிறது. போபாலில் இருந்து சுமார் 46கி.மீ தொலைவிலும், பெஸ்நகர் மற்றும் விதிஷா ஆகிய ஊர்களில் இருந்து 10கி.மீ தொலைவிலும் ஒரு மேடான பகுதியில் இது அமைந்துள்ளது.

 ரித்திரத்தின் சாட்சியாக காட்சியளித்துக்கொண்டிருக்கும் சாஞ்சி ஸ்தூபியின் பின்னணியில் பக்தியும் உண்டு. காதலும் உண்டு. புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டவர்களில் முக்கியமானவர், பேரரசர் அசோகர். இவரை விதிஷா நகரத்து வியாபாரிகள் சிலர் அணுகி, புத்த மையம் ஒன்று அமைக்க இடம்தருமாறு கேட்டுள்ளனர். உடனே சம்மதம் தெரிவித்த அசோகர், புத்த மையம் அமைக்கும் பணிகளில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

 ப்போது அந்த வியாபாரிகளில் ஒருவரது மகள்மீது காதல் கொண்ட அசோகர், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, தலைநகர் பாடலிபுத்திரத்துக்கு நாம் கண்டிப்பாக செல்ல வேண்டுமா? இங்கேயே இருந்து இல்லற வாழ்வில் ஈடுபட-முடியாதா.... என காதல்மனைவி கேட்டுவிட, மறுப்புச் சொல்ல முடியவில்லை மன்னருக்கு. சாஞ்சி பகுதியிலேயே தங்கி விட்டார். வீட்டையும், நாட்டையும் இங்கிருந்தே கவனிக்கத் தொடங்கியிருக்கிறார். அரச தம்பதிக்கு மகேந்திரா, சங்கமித்ரா என இரண்டு குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளும் புத்தமதத்தின்மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்தனர். பின்னாளில் இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளிலும் புத்தமதத்தைப் பரப்பியுள்ளனர்.
 சாஞ்சியில் பல ஸ்தூபிகள், சிறு கோவில்கள் உள்ளன. இவை கி.மு.3 - கி.பி.13ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்டவை என கணிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அரைவட்ட கோள வடிவத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கும் பிரதான ஸ்தூபிதான், 3ம் நூற்றாண்டில் அசோகரால் கட்டப்பட்டதாம். செங்கல் மற்றும் உள்ளூரில் கிடைக்கும் கற்களால் அழகுற அமைக்கப்பட்டு இன்றளவும் வடிவமைப்பால் அசத்திக்கொண்டிருக்கிறது இந்த ஸ்தூபி.

 தை தியான அரங்கம் என்று கூட கூறலாம். இதன் கட்டிடங்களில், சுவர்களில் புத்தரைப்பற்றி நேரிடையாக குறிப்பிடாமல், அவரைப் பற்றி மறைமுகமாக சில குறிப்புகள் உணர்த்தப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பு. தாமரை வடிவம்-புத்தரின் பிறப்பையும், மரம் - புத்தர் ஞானம் அடைந்ததையும், சக்கரம்- புத்தரின் சொற்பொழிவையும், ஸ்தூபி- முக்தியையும் குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. சாஞ்சி ஸ்தூபிக்கு நான்கு முக்கிய வாசல்களும் உள்ளன. இந்த வாசல்களிலும் கலைத்திறன் பளிச்சிடுகிறது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள புத்தமதத்தினரையும் கவர்ந்துள்ள சாஞ்சி ஸ்தூபி 1989ம் ஆண்டில் யுனெஸ்கோ பண்பாட்டுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றது.
எப்படிப் போகலாம்?
சாலை மார்க்கமாக போபாலில் இருந்து 46 கி.மீ, விதிஷாவில் இருந்து 10 கி.மீ, இந்தூரில் இருந்து 232 கி.மீ தொலைவில் சாஞ்சி உள்ளது. ரயிலில் செல்வதென்றால் போபாலில் இறங்கி அங்கிருந்து சாலை மார்க்கமாக செல்லலாம். போபாலில் விமான நிலையமும் உள்ளது. சாஞ்சி ஸ்தூபியை பார்வையிட கட்டணம் உண்டு. இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் அருங்காட்சியகம் ஒன்றும் இங்கு உள்ளது.
-------------------------------------------------------------------------------------------------- 
Dotcom Spl >> tourism
26.02.09      கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ நிறுவனம் அவற்றை பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் உள்ளன. அந்த வகையில் இந்தியாவின் பண்பாட்டுச் சின்னங்களை நாம் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா


கல்லிலே கண்ட கலைவண்ணமாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன அஜந்தா குகைகளும், அதனுள்  தீட்டப்பட்டுள்ள ஓவியங்களும்!.

குகைகளைக் குடைந்து உருவாக்கப்படும் கோவில்களுக்கு குடைவரைக்கோவில்கள் என்று பெயர். அஜந்தாவும் இந்த ரகம்தான். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12கி.மீ தொலைவில் காணப்படும் குடைவரைக்-கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடம் கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை. குகைகளை முன்பு மழைக்காலத்தில் ஓய்வெடுக்கும் இடமாக புத்தபிட்சுகள் பயன்படுத்தியிருக்கின்றனர். கி.மு.2 முதல் கி.பி. 6ம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக இவை உருவாக்கப்பட்டுள்ளன. சீன யாத்ரீகர் யுவான் சுவாங் இதுபற்றி குறிப்பெழுதி-யிருக்கிறார்.

காட்டுப்பகுதிக்குள் கரும்-பாறைக்குள் புதைந்து கிடக்கும் இந்த கலைப்பொக்கிஷம் 1819ம் ஆண்டில்தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மெட்ராஸ் ரெஜிமென்டை சேர்ந்த ஆங்கிலேய ராணுவ அதிகாரி இந்தப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றபோது இதைக் கண்டுபிடித்துள்ளார். சலசலத்துக் கொண்டிருக்கும் வகோரா நீரோடையை தொட்டபடி குதிரைக்குளம்பு போன்ற வடிவத்தில் நீண்டுகிடக்கும் குகைகளின் உயரம் சுமார் 76மீட்டர். இங்கு நடந்த பல்வேறுகட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரையிலும் 30 குகைகள் கண்டுபிடிக்-கப்பட்டுள்ளன. பாறைகளில் மட்டுமல்ல, கூரைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்களும் நம்மை ஓ போட வைத்துக்-கொண்டிருக்கின்றன.

கலைநயம் மிக்க ராட்சத தூண்கள், மண்டபங்கள், சிலைகள், புத்தரின் பல்வேறு வடிவங்கள் என ஒவ்வொரு குகையிலும் ஒவ்வொருவகை ஆச்சரியம் நிரம்பியிருப்பதும் அஜந்தாவின் கூடுதல் சிறப்பு. பார்க்கப் பார்க்கப் பரவசப்படுத்தும் ஓரிடம் அஜந்தா. இதை 1983ம் ஆண்டில் உலகப்பண்பாட்டுச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ.
எப்படிப்போகலாம்?
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அஜந்தாவுக்கு சாலை வசதி உள்ளது. ரயிலில் செல்பவர்கள், ஜல்கானில் இறங்கி விடலாம். இங்கிருந்து 50 கி.மீ தொலைவுதான் அஜந்தா. விமானப் பயணத்தைப் பொறுத்தவரை அவுரங்காபாத்தில் விமான-நிலையம் உள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் இருந்து அவுரங்காபாத்திற்கு தினமும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவுரங்காபாத்தில் இருந்து அஜந்தா 107 கி.மீ தொலைவில் உள்ளது. அஜந்தா குகைகளை இந்திய நேரப்படி காலை 9மணி முதல் மாலை 5.30 மணிவரை பார்வையிடலாம். கட்டணம் உண்டு.
------------------------------------------------------------------------------------------------------ 
Dotcom Spl >> tourism
 
20.02.09      ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை
"பாரம்பரியம்"!. முன்னோர்களின் வாழ்க்கை முறையை காட்டிக்கொண்டிருக்கும் காலக்கண்ணாடி. உலகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ளது யுனெஸ்கோ நிறுவனம். இதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் உள்ளன. உலகளவில் சுற்றுலா முக்கியத்துவம் பெற்றுள்ள இந்தியாவின் பாரம்பரியமிக்க இடங்களை நாம் வாரம்தோறும் பார்க்க இருக்கிறோம்.
ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை

"பளிங்கினால் ஒரு மாளிகை...பவளத்தால் மணிமண்டபம், உயரத்தில் ஒரு கோபுரம்...உன்னை அழைக்குது வா..." என்ற பாடலை முணுமுணுப்-பவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் நின்று பாடவேண்டிய சரியான இடம் ஆக்ரா கோட்டைதான். இது ஒரு அரண்மனை நகரம். இங்கு சுமார் 100ஏக்கர் நிலப்பரப்பில் எழுந்து நிற்கும் கலைப்பொக்கிஷங்கள் வேறெங்கும் காணக்கிடைக்காதவை.

வரலாற்றின் வளமான பக்கங்கள்பல மொகலாய மன்னர்களின் வசந்தமான வாழ்க்கையால் நிரப்பப்பட்டவை. 

அவர்களது வாழ்க்கைக்கும், அப்போது நடந்த பல ஆச்சரியங்களுக்கும் சான்றாக திகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தக்கோட்டை. யமுனை ஆற்றின் கரையோரத்தில் தாஜ்மகாலில் இருந்து சுமார் இரண்டரை கி.மீ தொலைவில் அமைந்துள்ள இது, ஆக்ராவின் செங்கோட்டை, லால் கிலா, போர்ட் ரூய்ஜ் என்றும் அழைக்கப்படுகிறது. அப்போது நாட்டின் மிகப்-பெரிய கஜானா, நாணயசாலையை இந்தக் கோட்டை கொண்டிருந்தது. பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், அவுரங்கசீப் ஆகியோர் இங்குதான் வசித்துள்ளனர்.

முதலில் ராஜபுதனத்து சௌகான்கள் வசம் கோட்டை இருந்துள்ளது.  அப்போது இந்த இடம் பஸல்கார், படல்கார் (badalgarh) என்றழைக்-கப்பட்டுள்ளது.  டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு தலைநகரை மாற்றி இங்கு வாழ்ந்த முதல் டெல்லிசுல்தான் சிக்கந்தர் லோடி (1487-1517). இதனால் இது நாட்டின் இரண்டாவது தலைநகராகக் கருதப்பட்டுள்ளது.

சிக்கந்தர் லோடிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரது மகன் இப்ராகிம் லோடி சுமார் 9ஆண்டுகள், அதாவது 1526ல் பானிபட் போரில் கொல்லப்படும் வரை இங்குதான் வாழ்ந்துள்ளார். இவரது காலத்தில்தான் இங்கு புதிய அரண்மனைகளும், மசூதிகளும், கிணறுகளும் வெட்டப்பட்டுள்ளன.

 இந்தநிலையில், பானிபட் போரில் வெற்றிபெற்ற மொகலாயர்கள் இந்த கோட்டையையும் கைப்பற்றினர். இங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பெரும் செல்வங்கள் அவர்கள் வசமானது. இதில் பிரபலமான கோஹினூர் வைரமும் அடங்கும்.

மொகலாயர் வசம் வந்த பிறகு கோட்டை சீரமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான சுற்றுச்சுவரை பாபர் எழுப்பினார். பாபரின் மகன் ஹுமாயூன் 1530ம் ஆண்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். பிள்ளைப்பருவத்தில் தண்ணீரில் விழுந்த ஹுமாயூனை, நீர்சுமக்கும் தொழிலாளியான நஜாம் என்பவர் காப்பாற்றியுள்ளார். இளவரசரின் உயிரைக் காப்பாற்றிய நஜாம், அரைநாள் மன்னராக ஆக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார். அந்தச் சம்பவம் நடந்ததும் இங்குதான்.

1558க்கு பிறகு ஆக்ராவுக்கு வந்த அக்பர் இந்தக் கோட்டையை புனரமைக்க உத்தரவிட்டுள்ளார். தினமும் சுமார் 4ஆயிரம் கட்டிடக்கலைஞர்கள் பணியாற்றி 8ஆண்டுகளில் (1565-1573) புதிய கோட்டையை கட்டி முடித்துள்ளனர். மண்டபங்கள், மசூதிகள், மாடமாளிகைகள் என அட்டகாசப்படுத்தப்பட்டது அக்பர் காலத்தில்தான். அக்பரின் முக்கிய அமைச்சரும், அக்பர்நாமாவை எழுதியவருமான அபுல்பஸல் இந்தக்கோட்டைக்குள் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டதாக குறிப்பெழுதியிருக்கிறார்.

அன்றைய கட்டடங்கள் இப்போது இல்லை. அக்பர் கட்டியவற்றில் பல கட்டிடங்களை பளிங்கு மாளிகைகள் அமைப்பதற்காக ஷாஜகான் அகற்றியுள்ளார். ஆங்கிலேயர் வசம் கோட்டை வந்த பிறகும் சில கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது.

ரசனைமிக்க ஷாஜகான் காலத்தில்தான் இங்கு பளபள பளிங்கு கட்டிடங்கள் பல எழுப்பப்பட்டுள்ளன. இவற்றில் மோத்தி மஸ்ஜித், நஜினா மஸ்ஜித், மினா மஸ்ஜித் போன்ற மசூதிகள் குறிப்பிடத்தக்கவை. அதே நேரத்தில் ஷாஜகானை அவரது மகன் அவுரங்கசீப் சிறைவைத்த இடமும் இந்த கோட்டைதான். எட்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த ஷாஜகான் மரணமடைந்த பிறகு அவரது உடல் அருகில் உள்ள தாஜ்மகாலுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஷாஜகானுக்குப் பிறகு கோட்டை களையிழந்தது. இப்படியாக பல வரலாறுகளில் வலம் வந்து கொண்டிருந்த கோட்டை, 1803ம் ஆண்டில் ஆங்கிலேயர் வசம் வந்தது.
 
ஆக்ரா கோட்டைக்குள் திராட்சைத் தோட்டம் என்றழைக்கப்படும் ஆங்குரி பாக், பொதுமக்களிடம் குறைகள் கேட்கும் திவான்-இ-ஆம் மண்டபம், பிறநாட்டு மன்னர்கள் மற்றும் பிரபலங்களை வரவேற்கும் திவான்-இ-காஸ் மண்டபம், மாட மாளிகையான கோல்டன் பெவிலியன்ஸ், பளபள பளிங்கு மாளிகைகளான ஜஹாங்கிர் மஹால், காஸ் மஹால், மச்சி பவன், முஸம்மான் பர்ஜ், மினா மஸ்ஜித், பியர்ல் மசூதி, நஜினா மஸ்ஜித், பெண்கள் மட்டும் ஷாப்பிங் செல்வதற்காக கட்டப்பட்ட செனானா மினா பஜார், அரசவைக் கலைஞர்கள் இசைநிகழ்ச்சி நடத்தும் நவ்பத் கானா, மன்னரின் அந்தப்புரமான ரங்மஹால், ஷாஜகானி மஹால், காலத்தால் அழிக்க முடியாத கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த அரச ஒப்பனைக்கூடமான ஸீஸ் மகால் போன்றவை இன்றளவும் கலைப்பொக்கிஷங்களாக காட்சி-யளித்துக் கொண்டிருக்கின்றன.

கோட்டைக்குள் செல்ல கட்டணம் உண்டு. இந்திய குடிமக்களுக்கும் SAARC, BIMSTEC அமைப்பின் உறுப்புநாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கும் நுழைவுக்கட்டணம் நபருக்கு 10ரூபாய்தான். பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஐந்து அமெரிக்க டாலர் அல்லது ரூபாய் 250 கட்டணமாகும்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஆக்ரா கோட்டை, டெல்லியில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ளது. ஆக்ராவில் விமான நிலையமும்,  ரயில்நிலையமும் அமைந்துள்ளன. யுனெஸ்கோவின் பாராம்பரியச் சின்னங்கள் பட்டியலில் ஆக்ரா கோட்டை 1983ல் இடம் பெற்றது.
 

No comments:

Post a Comment